டித்வா புயல் காரணமாக நாளை நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தென்மேற்கு வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு டித்வா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் டித்வா புயம் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து 30ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கும்.
அடுத்த 24 மணிநேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிட்வா புயல் காரணமாக நாளை நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாம்பன், நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.” இவ்வாறு அவர் கூறினார்.