சென்னையில் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் அதிமுகவின் தேர்தல் வியூக வகுப்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களும் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை திருமங்கலத்தில் உயர் ரக ஓஜி கஞ்சா விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சர்புதீன், சீனிவாசன், சரத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்போது சர்புதீன் காரில் இருந்து ரூ. 27.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் சர்புதீன் காரில் இருந்த பணம் ரூ27.5 லட்சம், ஹரி என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இதனடிப்படையில் ஹரி மற்றும் சாய் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஹரி மற்றும் சாய் ஆகியோரிடம் சுமார் 10 மணிநேரம் போலீசார் விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு சிக்கிய நபர்களின் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
போலீசிடம் சிக்கிய சர்புதீன், நடிகர் சிம்பு நடித்து 2021இல் வெளியான ஈஸ்வரன் படத்தின் இணை தயாரிப்பாளர் ஆவார்.
ஹரி, சாய் இவர்கள் இருவரும் அதிமுகவின் வியூக வகுப்பு நிறுவனங்களில் ஒன்றுடன் தொடர்புள்ளவர்கள் எனவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.