தமிழ் நாடு

மாம்பழம் யாருக்கு...? - பாமக வழக்கில் தேர்தல் ஆணையம் அதிரடி வாதம்!

Staff Writer

பாமகவில் தந்தை மகன் இடையேயான மோதல் முற்றிய நிலையில் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என தில்லி உயர்நீதிமன்றத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அன்புமணியை பாமகவில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் தெரிவித்தார். அதேசமயம் பாமகவின் தலைவர் நான்தான் என்று அன்புமணி கூறி வருகிறார். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களும் இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர்.

இரு தரப்புக்கும் இடையே மோதல்போக்கு வலுத்து வரும் நிலையில் இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்திடம் சென்றது. அப்போது ஆவணங்களின் அடிப்படையில் பாமகவின் தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து அன்புமணி தேர்தல் ஆணையத்தையே விலைக்கு வாங்கிவிட்டதாக ராமதாஸ் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.

மேலும் தனது பாட்டாளி மக்கள் கட்சியை மகன் அன்புமணி அபகரித்து விட்டதாக கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (டிசம்பர் 4) விசாரணைக்கு வந்தது. அப்போது போலி ஆவணங்களை பயன்படுத்தி அன்புமணி ராமதாஸ் தரப்பு கட்சியை அபகரித்துள்ளதாக டாக்டர் ராமதாஸ் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தது. அதற்கு பதில் அளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், இரு தரப்பினரும் நாங்கள் தான் தலைமை என பாமக கட்சிக்கு உரிமை கோருகிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில், இருவரும் மாம்பழம் சின்ன கேட்கும்போது, எங்களால் இருவருக்கும் ஒதுக்க முடியாது. எங்களிடம் இருக்கும் ஆவணங்களின்படி ஆகஸ்ட் வரை அன்புமணியே பாமகவின் தலைவராக இருக்கிறார் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை முடிவில், கடிதங்களின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது, அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் உள் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் ஒரு தரப்பு வாதத்தை மட்டும் வைத்து தேர்தல் ஆணையம் முடிவெடுப்பது தவறு என்று நீதிபதிகள் கூறினர். மேலும் பாமகவினர் உரிமையியல் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்துள்ளனர்.