பொன்ராஜ் - விஜய் 
தமிழ் நாடு

ஆதாய சூதாடி யார்? - லிஸ்ட் போட்டு விஜய்யை விளாசிய பொன்ராஜ்!

Staff Writer

தமிழக பெண்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக பெண் தொண்டர்கள் குறித்த தனது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் காயம்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளரும், அரசியல் விமர்சகராகவும் உள்ள பொன்ராஜ், சமீபத்தில் தமிழக பெண்கள் மற்றும் தவெக பெண் தொண்டர்களை விமர்சித்துப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது இந்தப் பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், பொன்ராஜ் பேச்சு தொடர்பாக சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் தவெக தரப்பில் விஜய் நேரில் சென்று புகார் அளித்தார். பொன்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து பொன்ராஜ் தமது எக்ஸ் பக்கத்தில் விரிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகர் விஜய் அவர்களே! ஆதாய சூதாடி நீங்களா? நானா?

உங்களை தலைவன் என்று நேசிக்கிற பெண்களில் சில பேர் ஊடகங்களில் தரம் தாழ்ந்து :

1) அக்காவா இருப்போம், தங்கச்சியா இருப்போம், விஜய்க்கு பெண்டாட்டியா கூட இருப்போம் என்று பொது வெளியில் பேசியதை கண்டித்து திருத்தாமல் அதை ரசித்துக்கொண்டிருந்த நீங்கள் ஆதாய அரசியல் சூதாடியா, நானா?

2) எனக்கு என்புருஷனை விட விஜய்தான் பிடிக்கும் என்ற பெண்மணியை கண்டித்து திருத்தாமல், ரசித்து கொண்டிருந்த நீங்கள் அரசியல் ஆதாய சூதாடியா, நானா?

3) குப்பை கூட்டுறவ கூட நாலு புருஷன் வச்சிருக்கான்னு ஒரு மாணவி பேசி பின்னர் செயலுக்கு வருத்தம் தெரிவித்தாரே – அதை கூட ரசித்துக்கொண்டிருந்த நீங்கள் அரசியல் ஆதாயசூதாடியா, நானா?

4) உங்களை அரசியல் ரீதியாக நான் செய்யும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், எதற்கெடுத்தாலும் திமுக பின்னால் இருக்கிறது என்று திமுக போபியா பிடித்து,எதைச் சொன்னால் பித்தம் தெளியும் என்று அலையும் நீங்கள் அரசியல் ஆதாய சூதாடியா, நானா?

5) இன்று காலையில் இருந்து இப்போதுவரை நூற்றுக்கணக்கான மிரட்டல் கால்கள், சமூக வலைத்தளத்தில், வாட்ஸ்ஆப்பில் என்னையும், என் குடும்பத்தையும் இழிவாக, தரக்குறைவாக பேசி திட்டுவதற்கு தான் வெர்சுவல் வாரியர்களை உருவாக்கி வைத்திருக்கிறீர்களா? என்ன ஒரு இழி நிலைக்கு இறங்கி இருக்கிறீர்கள்.

அரசியலில் நான்கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வக்கு இல்லை என்றால் இப்படியா வசை பாடுவது.

நான் பெண்களை எப்போதும் கண் போல போற்றுபவன், உங்களை போல் வீட்டில், சினிமாவில், உங்கள் கட்சியில் பெண்களை அவமரியாதையாக நடத்திவிட்டு, அரசியலில் பெண்ணை போற்றுபவன் போல் நடிப்பவன் அல்ல.

எந்த பெண்ணையும் அது உங்கள் ரசிகையாக இருந்தாலும் இழிவு படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.

ஆனால், பொது வெளியில் காலாச்சார சீர்கேட்டை உருவாக்கும் சில நாதாரிகள் பெண்களாக, உங்கள் ரசிகர்களாக இருந்தாலும், I will call spade as spade.

எனவே எனக்கு பாடம் எடுக்கும் முன்பு, நீங்கள் பெண்ணை மதித்து போற்ற கற்றுக்கொள்ளுங்கள், உங்களுக்காக காயம்பட்டு, உயிர்நீத்த இளைஞர்களின் குடும்ப பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.

உங்கள் கட்சி பெண்களுக்கு உங்கள் கட்சி ஆட்களால் இழைக்கப்படும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு பேட்டி கொடுத்த பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.

உங்களை பார்க்க வந்து காரை மறித்து நியாயம் கேட்ட உங்க கட்சிக்கார பெண்ணை உங்கள் காரில் இடித்து தள்ளி விட்டு சென்றதிற்கு மன்னிப்பு கேளுங்கள்.

இதை முதலில் நீங்கள் செய்தால், நானும் என் சொல்லால் காயம் பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

மீண்டும் சொல்கிறேன், நான் எந்த பெண்ணையும் பொதுவாக அவதூறு சொல்லவில்லை, அப்படி சொல்லவும் மாட்டேன்.

எனவே தொடர்ந்து அலைபேசி மிரட்டல் தொடர்ந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு பொன்ராஜ் கூறியுள்ளார்.