தமிழ் நாடு

திமுக கூட்டணியில் 5 தொகுதிகளைப் பெற்றது ஏன்? - சண்முகம் விளக்கம்!

Staff Writer

திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சி 5 தொகுதிகளை ஏன் ஏற்றுக் கொண்டது? என அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடனான சந்திப்பில் 5 தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் கூறியதாவது:

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், மதவெறி சக்தியான பிஜேபி, அதற்குத் துணைபோகிற அதிமுக உள்ளிட்ட அணியை எதிர்த்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேதான் தேர்தல். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல ஆண்டுகளாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினுடைய ஒரு அங்கமாக செயல்பட்டு வருவது தெரியும்.

இந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்து இந்தத் தேர்தலைச் சந்திப்பது என்பதை நாங்கள் தொடர்ச்சியாகச் சொல்லி வந்திருக்கிறோம். அதே நேரத்தில், இந்த அணியிலிருந்து போட்டியிடுவது எவ்வளவு முக்கியமோ, அதே சமயத்தில் ஒரு கூடுதலான தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறது.

2021-ஆம் ஆண்டு 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. அதைவிட கூடுதலான தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவினுடைய முடிவு. அதற்கான தொடர் முயற்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திமுக தலைமையோடு தொடர்ந்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களோடும் 2 முறை பேச்சுவார்த்தை என்பது நடைபெற்றது. இருந்தாலும் அதிகமான கட்சிகள் இந்த அணியிலே இடம்பெற்றுள்ளன; புதிதாகச் சில கட்சிகள் வந்து சேர்ந்திருக்கின்றன.

அனைவருக்கும் தொகுதிகளைப் பகிர்ந்து அளிக்க வேண்டிய ஒரு சூழ்நிலையில் நாங்கள் கேட்கக்கூடிய எண்ணிக்கையில் தொகுதியைத் தர இயலவில்லை என்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்தார்கள்.

ஆகவே 6 என்பதில் ஒரு தொகுதியைக் குறைத்து 5 தொகுதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் கேட்டுக் கொண்டார்கள். அது சம்பந்தமாக இன்று காலை நடைபெற்ற கட்சியினுடைய மாநிலச் செயற்குழு கூட்டத்தில் விவாதித்து, இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் சூழல், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கக்கூடிய நிலைப்பாடு எந்த விதத்திலேயும் அதிமுக – பிஜேபி கூட்டணிக்கு உதவி செய்யக்கூடிய வகையில் இருந்துவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வோடும், நாங்கள் எடுக்கக்கூடிய முடிவு இந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினுடைய ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய வகையில் இருந்துவிடக் கூடாது என்ற அக்கறையோடும் திராவிட முன்னேற்றக் கழகம் வழங்க முன்வந்திருக்கிற 5 என்கிற எண்ணிக்கையை ஏற்றுக் கொள்வது என்று கட்சியினுடைய மாநிலச் செயற்குழு முடிவு செய்தது.

அதன் அடிப்படையில் இப்போது திமுக-வின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்கிற முறையில் நானும் கையொப்பமிட்டு 5 தொகுதிகளுக்கான உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது.

இந்த எண்ணிக்கையில் எங்களுக்குத் திருப்தியில்லை. அதே நேரத்தில் நான் ஏற்கனவே சொன்ன காரணங்களின் அடிப்படையில் இதை ஏற்றுக் கொள்வது என்கிற முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம். இந்த உடன்பாட்டின் அடிப்படையில் நடைபெறவிருக்கக் கூடிய தேர்தலில் இந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இந்த அணி மகத்தான வெற்றி பெறுவதற்கான எல்லாவிதமான முயற்சிகளையும் தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: முதலமைச்சரை நேரில் பார்த்தும் 6 தொகுதிகளை அவர் ஏற்கவில்லையா?

பதில்: முதலமைச்சரிடம் நாங்கள் குறைந்தபட்சமாக தொகுதி குறைப்பு என்பதை எங்களுடைய கட்சி அணிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, மாநிலச் செயற்குழுவும் மாநிலக் குழுவும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தெரிவித்தோம். இதனால் ஏற்படக்கூடிய சிரமங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடத்தில் நேரடியாகத் தெரிவித்து 6 என்கிற எண்ணிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் என்கிற முறையில் தான் இன்று மாலை முதலமைச்சர் அவர்களை நானும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களும் சந்தித்தோம். ஆனால் அப்போதும் முதலமைச்சர் அவர்களுக்கு இருக்கிற சிரமங்களையும் இந்த 5 என்பதை ஏற்று ஒத்துழைக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொண்டார். இதை மீண்டும் மீண்டும் ஒரு முடிவில்லாமல் நீடித்துக் கொண்டே செல்வது தேர்தல் பணிகளுக்கும் இடையூறாக இருக்கும். மற்ற கட்சிகளோடும் பேசி அவர்கள் முடிக்க வேண்டிய ஒரு கட்டாயமும் இருக்கிறது. ஆகவே அந்த வகையில் இதை மேலும் நீடித்துக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, நாம் இதை ஏற்றுக் கொள்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்.

கேள்வி: தொகுதிகள் குறித்துப் பேசப்பட்டதா?

பதில்: கீழ்வேளூர், கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட தொகுதிகள் உட்பட ஒரு பட்டியலை முதலமைச்சரிடம் வழங்கியிருக்கிறோம். நாங்கள் விரும்பக்கூடிய தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதையும் தெரிவித்திருக்கிறோம். அதற்கான சந்தர்ப்பம் வருகிற பொழுது கட்டாயம் பேசலாம், நாங்கள் கவனத்தில் கொள்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

கேள்வி: சென்னையில் ஒரு தொகுதி உறுதியா?

பதில்: சென்னை உட்பட போட்டியிடுவதற்கான எங்களுடைய விருப்பப் பட்டியலைக் கொடுத்திருக்கிறோம். உறுதியாகப் போட்டியிட வேண்டும் என்கிற முறையில் தான் விருப்பப் பட்டியல் கொடுத்திருக்கிறோம், அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. சென்னை மாநகரத்திற்குள் ஒரு தொகுதி கட்டாயம் வேண்டும் என்பதை விருப்பப் பட்டியலில் கொடுத்திருக்கிறோம். இவ்வாறு பெ.சண்முகம் கூறினார்.