தமிழ் நாடு

எதற்கும் துணிந்த தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலைக்கு துணிந்தது ஏன் ?

Staff Writer

திரைப்பட முன்னோட்ட, ஆடியோ விழாக்களில் யார் குறித்தும் எவ்வித பயமுமுன்றி தனது ஆணித்தரமான கருத்துகளை அனல் தெறிக்க பேசி வந்த தயாரிப்பாளர் கே.ராஜன் நேற்று ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த 1983-ல் சுரேஷ் நடித்து வெளியான ‘பிரம்மச்சாரிகள்’ திரைப்படம் மூலம் தயாரிப்பாளர் ஆனவர் கே.ராஜன். ‘டபுள்ஸ்’, ‘அவள் பாவம்’, ‘நினைக்காத நாளில்லை’ உட்பட சில திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

‘நம்ம ஊரு மாரியம்மா’, ‘உணர்ச்சிகள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள அவர், ‘மைக்கேல்ராஜ்’, ‘உளவுத்துறை’, உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் திருட்டு விசிடி பிரச்சினை தலைதூக்கியபோது பலமுறை பர்மாபஜார் பகுதியில் நேரடியாக தலையிட்டு, போராடி வெற்றிபெற்றவர். சில பிரச்சைனைகளில் பெரிய நடிகர்கள் என்று பாராது கமல், ரஜினியைக் கூட கடுமையாக விமர்சித்து வந்தவர்.

கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 90 சதவிகித திரைப்பட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர். அப்படி கலந்துகொள்வதற்காக பெற்ற தொகையை ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக செலவழித்தார் என்றும் சொல்லப்படுகிறது.

நேற்று காரில் வேளச்சேரி சென்றுவிட்டு திரும்பும் வழியில் அடையாறு திரு.வி.க பாலம் வந்ததும் காரை நிறுத்துமாறு ஓட்டுநர் தனசேகரனிடம் கூறியுள்ளார். ‘மெதுவாக காரில் செல்லுங்கள். சிறிது தூரம் காலாற நடந்து வருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்ஓட்டுநர் காரை நிறுத்தியதும், இறங்கிச் சென்று ஆற்றில் குதித்துள்ளார்.

தயாரிப்பாளர் கே.ராஜனுக்கு மனைவி, 3 மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் சென்னை தண்டையார்பேட்டையில் வசிக்கின்றனர்.அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபகாலமாக ராஜன் மட்டும் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார்.

தற்கொலை குறித்து கே.ராஜனின் நட்பு வட்டாரத்தில் விசாரித்தபோது, கடந்த மூன்று வருடங்களாக சில தயாரிப்பாளர்களுக்கு, குறிப்பாக சிறு பெட்ஜெட் படத்தயாரிப்பாளர்களுக்கு குறைந்த வட்டியில் ஃபைனான்ஸ் செய்துள்ளார். அனைவருமே நன்கு பழகியவர்கள் என்பதால் கே.ராஜனால் நெருக்கிப் பிடித்து அதை வசூல் செய்ய முடியவில்லை. ஆனால் அவருக்குக் கடன்கொடுத்தவர்களோ அளவுக்கு அதிகமான நெருக்கடிகள் கொடுத்ததோடு தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.

இவர்களை சமாளிக்க வழிதெரியாமல்தான் கே.ராஜன் தற்கொலை செய்துகொண்டார் என்கிறார்கள்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram