தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கம் அளித்து மக்கள் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், பேரவைக்கு வருகைதந்த ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றாமல் வெளிநடப்பு செய்தார்.
இதுதொடர்பாக விளக்கம் அளித்து மக்கள் மாளிகை (ஆளுநர் மாளிகை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
1. ஆளுநரின் ஒலிவாங்கி (மைக்) பலமுறை அணைக்கப்பட்டது. அவர் பேச அனுமதிக்கப்படவில்லை.
2. ஆளுநர் உரையில் ஆதாரமற்ற தவறான பல தகவல்கள் உள்ளன. மக்கள் பிரச்னைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
3. ரூ. 12 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்துள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுவதில் தமிழ்நாடு நான்காவது பெரிய மாநிலமாக இருந்தது. தற்போது ஆறாவது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறது.
4. போக்சோ பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 55%, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் 33% அதிகரித்த போதிலும், பெண்கள் பாதுகாப்புப் பிரச்னைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
5. பள்ளி மாணவர்கள் உள்பட இளைஞர்களிடையே போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. போதைப்பொருள் பழக்கத்தால் ஒரே ஆண்டில் 2000-க்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் இளைஞர்கள், தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
6. தலித்துகளுக்கு எதிரான கொடுமைகளும், தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையும் கடுமையாக அதிகரித்து வருகின்றன. இது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
7. தமிழகத்தில் ஒரே ஆண்டில் சுமார் 20,000 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் - அதாவது கிட்டத்தட்ட தினமும் 65 தற்கொலைகள். நாட்டின் வேறு எங்கும் நிலைமை இவ்வளவு கவலைக்கிடமாக இல்லை. தமிழ்நாடு இந்தியாவின் தற்கொலைத் தலைநகரம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனாலும், இது அரசுக்கு ஒரு கவலையாகத் தெரியவில்லை. இதுவும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
8. கல்வித் தரத்தில் தொடர் சரிவைக் கண்டு இளைஞர்கள் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. 50% ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன.
9. பல ஆண்டுகளாகத் தேர்தல்கள் நடத்தப்படாததால், பல ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் செயல்படாமல் உள்ளன. இது குறித்து அந்த உரையில் ஒரு குறிப்புகூட இல்லை.
10. தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் கோயில்கள் அறங்காவலர் குழுக்கள் இல்லாமல், மாநில அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றன. கோயில்களின் தவறான நிர்வாகத்தால் கோடிக்கணக்கான பக்தர்கள் மிகுந்த மனவேதனையும் விரக்தியும் அடைந்துள்ளனர்.
11. தொழில்துறையில் ஏற்படும் செலவுகளால் சிறுகுறு நடுத்தர தொழில்கள் தமிழ்நாட்டில் பெரும் அழுத்தத்தில் உள்ளன. தமிழ்நாட்டுள்ள் உள்ள தொழில் முனைவோர் மற்ற மாநிலங்களில் தொழில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த பிரச்னை முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது.
12. கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் உள்ள கீழ்நிலை ஊழியர்களிடையே பரவலான அதிருப்தி நிலவுகிறது. அவர்கள் பதட்டமாகவும் விரக்தியுடனும் உள்ளனர். அவர்களின் உண்மையான குறைகளைத் தீர்ப்பதற்கான வழிகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை;
13. தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது மற்றும் அடிப்படை அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.