ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாளை (மார்ச்.21) நடைபெறவிருந்த திமுக வேட்பாளர் நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குபதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஆளும் திமுக தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வருகிறது. ஒருபுறம் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் போட்டியிட விருப்பமனு அளித்த கட்சியினரிடம் திமுக தலைமை நேர்காணல் நடத்தி வருகிறது.
சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மூன்று நாட்களாக நேர்காணல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நாளை நடைபெறவிருந்த நேர்காணல் வரும் மார்ச் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாளை நடைபெறவிருந்த வேட்பாளர் நேர்காணல் ஒத்திவைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாளை காலை நடைபெற இருந்த திருச்சி (வடக்கு, மத்திய, தெற்கு), தஞ்சை (தெற்கு, மத்திய), பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கான நேர்காணல் வரும் மார்ச் 23ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும்.
நாளை மாலை நடைபெற இருந்த புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட வேட்பாளர்களுக்கான நேர்காணல் வரும் 23 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவின் இந்த நேர்காணல் நடைமுறைகள் அக்கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.