கோவை காவல் ஆணையர் 
தமிழ் நாடு

கோவை துப்பாக்கிச்சூடு ஏன்...? காவல் ஆணையர் கொடுத்த பரபரப்பு விளக்கம்!

Staff Writer

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை சுட்டுப் பிடித்தது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: “கோவை விமான நிலையம் அருகே நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில் துடியலூர் அருகே உள்ள வெள்ளை கிணறு பகுதியில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. தனிப்படை போலீசார் அங்குச் சென்றபோது, அவர்கள் காவலர் ஒருவரைத் தாக்கியுள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி காவலர்கள் அவர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். சதீஷ் (30), குணா (20), கார்த்தி (21) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சதீஷ், கார்த்தி இருவரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். குணா மதுரையைச் சேர்ந்தவர். இவர்கள் பத்து பதினைந்து வருடத்துக்கு மேல் கோவையில் உள்ளனர். குற்றவாளிகள் மீது நான்கைந்து வழக்குகள் உள்ளன. கொலை, வாகன திருட்டு வழக்கு அவர்கள் மேல் உள்ளன. கடைசியாக சத்தியமங்கலத்தில் ஒரு திருட்டு வழக்கில் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். 30 நாள்களாக அவர்கள் வெளியே உள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று, அவர்கள் இருகூரில் மது குடித்துவிட்டே சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். அதன் பிறகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

3 பேருக்குமே திருமணம் ஆகவில்லை. சதீஷ் – கார்த்தி இருவருமே அண்ணன் தம்பிகள். குணா இவர்களின் உறவினர். குற்றம் நடந்த இடத்திலிருந்து இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் ஆகும்.

இரண்டு மூன்று சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன. சுமார் 300 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளோம். இதை வைத்துதான் அவர்கள் குற்றவாளிகள் என முடிவு செய்தோம்.” என்றார்.