போதைப்பொருள் 
தமிழ் நாடு

முதல்வர் விஜய் மவுனம் காப்பது ஏன்? - எடப்பாடி பழனிசாமி

Staff Writer

த.வெ.க. நாகை மாவட்ட நிர்வாகி பூபாலன் தொடர்பான மாபெரும் போதைப்பொருள் வழக்கு பற்றி மத்திய நிதி அமைச்சகம் செய்தி வெளியிட்டும் இன்றுவரை முதலமைச்சர் பதில் சொல்லாமல் மவுனம் காப்பது ஏன் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு :

"கடந்த 18.10.2026 அன்று வெளியிடப்பட்டுள்ள பத்திரிகைச் செய்திகளில், “ சமீபத்திய ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியில் நடந்த மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்களில் ஒன்று.” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இது ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் நெட்வொர்க்காக இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு பொறுப்பில் இருக்கின்ற முதலமைச்சராக, குறைந்தபட்சம் ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சிக்காரரின் இந்த வால்டர் வெள்ளை நடத்தை குறித்து விஜய் வாய் திறப்பார் என்று காத்திருந்து பார்த்தால், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி பேசும் பொது எப்படி இருப்பாரோ, அதேபோல மவுன சாமியாராகவே இருக்கிறார்.

கடந்த ஆட்சியில், ஜாபர் சாதிக் வழக்கில் மெத் போதைப் பொருளுக்கான சூடோஎப்பெடெரின் என்ற மூலப்பொருள் சிக்கிய வழக்கே மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த த.வெ.க. நிர்வாகி பூபாலன் வழக்கில், முழுமையாக பதப்படுத்தப்பட்ட மெத் கிரிஸ்டல்களே, அதுவும் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள 137 கிலோ சிக்கி இருக்கிறது.

ஆளுங்கட்சி பின்னணியில் இவ்வளவு பெரிய சர்வதேச போதைப்பொருள் மாஃபியா நடந்திருக்கும்போது, யாருக்காக போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் ஓடிக்கொண்டு இருந்தார் ரீல்ஸ் முதல்வர்?

இதுகுறித்து செய்தி வெளியிடும் ஊடகங்களை த.வெ.க. நாகை நகரச் செயலாளர் பால்ராஜ் என்பவர் மிரட்டல் வேறு விடுக்கிறாராம். அப்படியென்றால், இந்தப் போதைப்பொருள் விவகாரம் ஆளுங்கட்சித் தலைமைக்குத் தெரிந்து, அவர்கள் துணையோடுதான் நடக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? உங்கள் கட்சிக்காரர் குற்றத்திற்குப் பொறுப்பேற்று பதில் சொல்ல முடியாமல், ஊடகங்களை மிரட்டினால் மட்டும் செய்தி மறைந்துவிடுமா?

இந்த போதைப்பொருளைக்கூட உங்கள் அரசின் காவல்துறை பிடிக்கவில்லை. மத்திய அரசின் புலனாய்வுத் துறை அமைப்புதான் பிடித்திருக்கிறது. இதற்கே நீங்களும், உங்கள் தலைமையிலான ஆச்சரியக்குறி அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

மாற்றம் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்திருக்கும் உங்களிடம் இருந்து இதுபற்றி ஒரு விளக்கமாவது வருமா?" என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram