எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அரவிந்தன் இன்று காலையில் காலமானார்.
காலச்சுவடு பதிப்பகத்தில் ஆசிரியராகப் பணியாற்றிவந்த அவர், நாகர்கோவிலில் தங்கி பணியாற்றிவந்தார். சென்னையிலிருந்து திரும்பியவர், வழக்கம்போல எழுந்து அன்றாடப் பணிகளை கவனிக்க இருந்த நிலையில், காலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
"முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகவியலாளராகப் பணிபுரிந்து வந்தவர். 1990களில் இந்தியா டுடே இதழில் பணியாற்றிய அவர் பிறகு காலச்சுவடு பொறுப்பாசிரியராக இருந்தார். இந்து தமிழ் திசை, மின்னம்பலம், சமயம்.காம், நம் தோழி, நம்ம சென்னை முதலிய இதழ்களிலும் பணியாற்றினர். கடந்த சில ஆண்டுகளாகக் காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் பொறுப்பில் இருந்து வந்தார். இந்து தமிழ் திசை நாளிதழ் இணைப்பிதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றிய போது இலக்கியம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டவர். நாவல், சிறுகதை ஆகிய படைப்பிலக்கியத் துறைகளிலும் தொடர்ந்து இயங்கி வந்தார். சென்னையைக் களமாகக் கொண்டு அவர் எழுதிய ‘பொன்னகரம்’ நாவல் மிகுந்த கவனம் பெற்றது. ’பயணம்’ நாவலும் வேறுபட்ட களத்தைக் கொண்டது. சிறுகதை எழுதுவதில் தனித்த ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் வெளியான ‘வெல்கம் டூ மில்லெனியம்’ தொகுப்பு அதன் நவீனக் கருப்பொருள்களுக்காக போற்றப்பட்டது. நவீன இலக்கிய விமர்சனத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஜெயகாந்தன் படைப்புகள் பற்றி அவர் எழுதிய நீண்ட கட்டுரை பல்வேறு விவாதங்களை எழுப்பியது. கிட்டத்தட்ட பத்துக் கட்டுரை நூல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் விளையாட்டில் தீவிர ஆர்வம் உடையவர். அது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகள் தனி நூலாகவும் வந்துள்ளன. பாலசரஸ்வதி தேவி வாழ்க்கை வரலாறு, டி.எம்.கிருஷ்ணாவின் நூல்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டவற்றை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார். செம்மையாக்கத்தில் நல்ல அனுபவம் உள்ளவர். அவரது அகால மரணம் பெரும் அதிர்ச்சி தருகிறது.” என்று காலச்சுவடு நிறுவனம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரவிந்தனின் அதிர்ச்சி மறைவுக்கு தமிழகத்து, ஈழத்து எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் வாசகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.