இயற்கை எழில் கொஞ்சும் மலை அடிவாரங்களிலும் மழையின் சாரலிலும் தென்றலின் தொடுதலுடனும் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மக்கள் இன்று அவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரங்களை இழந்து புதிய வேலைவாய்ப்புகளையும், புதிய வாழ்க்கையையும் தேடும் நிலைக்குச் சென்றுள்ளனர். மரபு வழியை இழந்து போராடிக்கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் நிலையை சாகித்ய அகாதமி விருது வென்ற எழுத்தாளர் சோ. தர்மன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவருடைய பதிவு :
"பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா. கட்டுக்கடங்காத கூட்டம். கழுத்திலிருந்து மார்பில் தொங்க விடப்பட்டுள்ள ஒரு அட்டை. கணவன், மனைவி. கணவனைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் மனைவி. கழுத்தில் தொங்கும் அந்த அட்டையில் எழுதப்பட்டுள்ள வாசகம்.
"நான் பார்வையற்றவன். எனக்கு தயவுசெய்து தர்மம் செய்யுங்கள்"
அந்த கணவன், மனைவி இருவருமே நரிக்குறவர்கள். இதைப் பார்த்தவுடன் நான் பதறிப் போனேன். ஏனெனில் அவனுக்குப் பார்வை தெரியும் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் பல முறை இரவு அவனுடன் நான் முயல் வேட்டைக்குப் போயிருக்கிறேன். ஒரு வேளை சமீபத்தில் ஏதேனும் நடந்து விட்டதோ என்னவோ.
ஒருவித குழப்பத்துடன் அவனை நெருங்கினேன். அவன் மனைவி என்னை அடையாளம் தெரிந்துகொண்டு இலேசாக சிரித்தாள். கிட்டப் போய் அவனுடைய கழுத்தில் என் கைகளால் இறுக்கிய படியே கேட்டேன்.
"டேய்....ராஜா என்னடா இது. எப்படா உனக்கு இப்படியாச்சு"
என் குரலைக் கேட்டவுடன் பதறிப் போனான். கழுத்தில் தொங்கிய அட்டையைக் கழற்றி மனைவியிடம் கொடுத்துவிட்டு என் கைகளை இறுகப் பற்றியபடி எதிரே இருந்த டீ கடைக்கு நடந்தோம். பரஸ்பரம் நலம் விசாரித்தான். இருவரும் டீ குடித்தோம். வருத்தத்துடன் சொன்னான்.
"ஐயா அரசாங்கம் வேட்டையைத் தடை பண்ணி பத்து வருஷமாச்சு. துப்பாக்கி வச்சிருந்தாலே பாரஸ்ட்காரன் வந்து கைது பண்றான். பற்றாக்குறைக்கு நம்ம லோக்கல் போலீஸ் அடிக்கடி வருது. எங்களுக்கு வேற எந்தத் தொழிலும் தெரியாது. எங்கள் பூர்வீகத் தொழிலே வேட்டையாடுவதுதான். ஊசி,பாசி விக்கிறது எல்லாமே இப்ப வந்ததுதான். தேவாங்கு வச்சு கயிறு வித்துக்கிட்டு இருந்தோம். தேவாங்கு வச்சிருந்தால் அரெஸ்ட். எதையெடுத்தாலும் பத்து ரூபா, இருபது ரூபானு பிளாஸ்டிக் பொருட்கள் வித்தோம். இப்ப ஊர்ஊருக்கு அந்த மாதிரி கடைகள் நிறைய்ய வந்திருச்சு. நாங்க என்னய்யா செய்ய முடியும். "கவுச்சி" வாடையில்லாம நாங்களோ எங்க பிள்ளைகளோ சாப்பிட்டதே கிடையாது. வேற வழியில்லாம குருட்டு வேஷம் போட்டு பிச்சை எடுக்கிறோம்"
அரசு வேட்டையாடக் கூடாது என்று தடைசெய்து வைத்திருக்கும் முயல், காடை, கௌதாரி எதுவுமே தேசிய விலங்கோ அல்லது தேசியப் பறவையோ கிடையாது. அழிந்து வரும் அபூர்வ விலங்கோ பறவையோ கிடையாது. அப்புறம் ஏன் இவற்றின் வேட்டையைத் தடை செய்ய வேண்டும்?
நூற்றுக்கும் மேற்பட்ட முறைகள் வனத்துறையிடம், மாவட்ட ஆட்சியரிடம், மாண்புமிகு முதல்வரிடம் மனு கொடுத்தாயிற்று. நடவடிக்கையும் இல்லை. பதிலும் இல்லை. இரவு வேட்டைக்குப் போய் விடிய தெருக்களில் முயல்களை விற்பனைக்குக் கொண்டு வருவான். காடைகள், கௌதாரிகள் ஜோடி இவ்வளவு என்று விற்பனை செய்வார்கள். அவர்களே அறுத்து கறியாக்கிக் கொடுத்துவிட்டு கௌரவமாக காசு வாங்கிக் கொண்டு போவார்கள்.
நான் ஒரு விவசாயி என்ற முறையில் சொல்கிறேன். இனப்பெருக்கத்தில் முயல் பெரிய கில்லாடி. குட்டிகளை ஈன்று பெருக்குகிறது. எங்களுடைய வெள்ளாமைகளைத் துண்டு துண்டாக வெட்டி பயிர்களை நாசம் பண்ணுகின்றன. நாய்கள் வைத்தும் வேட்டையாடக் கூடாது.
ஒரு காலத்தில் ஆஹா....ஓஹோ...என்று இருந்த வேட்டை நாய்கள் இப்போது பயனற்றுப் போய் விட்டன. சிறந்த வேட்டை நாய் இனமான சிப்பிப்பாறை நாய்களின் இனமே அழிந்து விட்டது. ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கான கங்காரு வேட்டையை அரசு தடை செய்தது. மூன்றே ஆண்டுகள்தான். ஆஸ்திரேலிய நாட்டு விவசாயிகள் வீதியில் இறங்கி போராட வேண்டிய சூழல் ஏற்பட்டது. கங்காருகளின் அழிச்சாட்டியத்தை விவசாயிகளால் தாங்க முடியவில்லை. அப்புறம் அரசாங்கமே நேரடியாகத் தலையிட்டு முப்பது சதவிகிதம் கங்காருகளை வேட்டையாடிக் கொன்றது.
கடந்த பத்தாண்டுகளாக இரண்டு திராவிடக் கட்சிகளும் செவிசாய்க்கவில்லை. ஜல்லிக்கட்டை தடை செய்த அதே பீட்டாதான் இதற்கும் காரணம் என்று சொல்கிறார்கள். இதுவரை அரசு தகுந்த காரணத்தைச் சொல்லவில்லை. புதிதாக பதவியேற்று இருக்கும் மாண்புமிகு முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் உடனடி கவனம் செலுத்தி முயல், காடை, கௌதாரி, காட்டுப்பன்றி இவைகளை வேட்டையாடக் கூடாது என்ற தடையை நீக்க வேண்டும்.
குறிப்பு: பரவலாக தமிழ்நாடெங்கும் வசிக்கும் நரிக்குறவர்களுக்கும் வாக்குரிமை உண்டு. நம்முடைய ஆதி தொழிலான வேட்டைத் தொழிலை பரம்பரையாகச் செய்து வரும் கிராம மக்களிடம்தான் அதாவது அறுபது சதம் மக்கள் வாக்குகள் உண்டு. வேட்டை நாய்களின் இனமே அழிவின் விளிம்பில் இருக்கிறது." என்று சோ.தர்மன் எழுதியுள்ளார்.