சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி 
தமிழ் நாடு

எதிர்விளைவுகளை உணர்ந்து பேச வேண்டும்! – உதயநிதிக்கு நீதிமன்றம் அறிவுரை!

Staff Writer

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில், ”எதிர்விளைவுகளை உணர்ந்து பேச வேண்டும்” என உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற த.மு.எ.க.ச.வின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கொசு, டெங்குகாய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் ஒழிப்பதைப் போல், சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.

அவரின் பேச்சு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டன.

இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தம் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, உதயநிதி ஸ்டாலின் தரப்பில், சனாதன தர்ம ஒழிப்பு பேச்சு தொடர்பான வழக்கை எதிர்கொள்ள மாட்டோம் என தெரிவிக்கவில்லை. அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்றுதான் கேட்டுள்ளோம் என்று கூறப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீங்கள் சாமானியர் அல்ல. அமைச்சர் பதவி வகிப்பவர். அமைச்சராக இருந்து கொண்டு பேசும்போது எதிர்விளைவுகளையும் உணர்ந்து பேச வேண்டும். கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி விட்டு தற்போது பாதுகாப்பு கோரி நீதிமன்றம் வந்துள்ளீர்கள். அமைச்சராக இருக்கும் நபர் இதுபோன்று பேசினால் என்ன நடக்கும் என்பது தெரியாதா?. அந்தந்த நீதிமன்றங்களுக்கு சென்று தடை உத்தரவை பெறுங்கள், நடக்காத பட்சத்தில் உச்சநீதிமன்றத்தை நாடுங்கள் என கூறிய நீதிபதிகள் இந்த மனு மீதான விசாரணையை வருகிற 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.