முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மைய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இப்போது பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
வரும் 7ஆம் தேதி முதல் அவர் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ள நிலையில், இந்த உத்தரவு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், பா.ஜ.க. முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை முதலியோருக்கு கருப்புப் பூனைப் படை பாதுகாப்பு வழங்கப்பட்டது.
அதையடுத்து, இப்போது பழனிசாமிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, தென்மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் எதிர்ப்பு ஏற்படலாம் என்று பேசப்பட்டது. அப்போது வன்னியருக்கான தனி ஒதுக்கீட்டால் மற்ற பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு குறிப்பாக கள்ளர் சமூகத்தினருக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுவதாகப் பிரச்னை எழுந்தது. அப்போதும் எதிர்ப்பை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அவரைக் கிண்டல்செய்தும் தாக்கமுயன்றும் பரபரப்பைக் கிளப்பினர். நல்வாய்ப்பாக அசாதாரண சம்பவம் ஏதும் நிகழவில்லை.
மீண்டும் அடுத்த பிரச்சாரம் தொடங்கவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு கருப்புப் பூனைப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.