பல்லாயிரம் கோடி லஞ்சம், ஊழலில் ஈடுபட்டுள்ள அதானியைக் கைது செய்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடு என மத்திய அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னையில் இன்று அதானி அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்பட்டது.
அக்கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்வா தலைமையில் அவ்வமைப்பினர் நுங்கம்பாக்கம், அதானி சிட்டி அலுவலகம் முன்பு காலை 10 மணியளவில் திரண்டனர்.
முன்னதாக, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு அளிக்காமல் காவல்துறை ஒதுக்கிய இடத்தில் காலை 10:15 முதல் 11 மணி வரை முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
சிறிது நேரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இதுகுறித்து செல்வா ஊடகத்தினரிடம் கூறுகையில், “ இருபது நிமிடம்கூட ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்காமல் திடீரென அரசாங்க நிர்பந்தம் எனக் காரணம் சொல்லி காவல்துறை பலவந்தமாக தோழர்களை கைது செய்தது.நாட்டு மக்களின் மீது கோடிக்கணக்கான மின் கட்டண உயர்வை சுமத்துவதற்கு காரணமான, ஊழல் பேர்வழி ,சர்வதேச குற்றவாளி அதானியை கைது செய்யச் சொல்லி, அதானி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினால் தமிழக அரசு கைது செய்வது ஏன்? மக்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் பாஜகவின் கூட்டாளி அதானி மீது நடவடிக்கை எடுக்க, தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் போராடாமல் மவுனம் காப்பது ஏன்?குறிப்பிட்ட நாளில் பாக்கி பணம் கட்டாதவர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள், லோடு வண்டியில் கூடுதலாக சுமை எடுத்துச் செல்லும் வாகனங்கள், அப்பாவி சிறு குறு மற்றும் தெருவோர வியாபாரிகள், பார்க்கிங்கில் விடப்பட்ட வாகனங்கள் என பலப் பல முனைகளில் அப்பாவி மக்களிடம் கிஞ்சிற்றும் ஈவு இரக்கம் அற்று விதிகளைப் பேசி பணம் பறிக்கும் அரசாங்கங்கள், கோடிக்கணக்கில் கொள்ளையடித்த அதானி குறித்து மூச்சு விட மறுப்பது ஏன்?” என்று சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.