தமிழ் நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் இடங்களில் 2-வது நாளாக சோதனை

Staff Writer

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பண மோசடி ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், கொங்கு உணவக உரிமையாளர் மணி, காளிபாளையம் பெரியசாமி ஆகியோரின் வீடுகளில் சோதனை மேற்கொள்ள வந்த வருமானவரித்துறை அதிகாரிகளை திமுகவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து, ஒப்பந்ததாரர் பிரேம்குமார் உள்ளிட்ட நான்கு இடங்களில் மட்டும் காவல்துறை பாதுகாப்புடன் சோதனை நடைபெற்றது.

நேற்று, கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான 22 இடங்களில் சோதனை நடைபெற்றது. கோவை கோல்டுவின்ஸ் பகுதியில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான செந்தில் கார்த்திகேயனின் வீடு மற்றும் அலுவலகங்களில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர்.