அமைச்சர் மரிய வில்சன் 
தமிழ் நாடு

அமைச்சர் மரிய வில்சன் நீதிமன்றத்தில் ஆஜர்!

Staff Writer

உடன்பிறந்த அண்ணனையும் அவரின் அண்ணியையும் வீடுபுகுந்து தாக்கியது தொடர்பான வழக்கில், அமைச்சர் மரிய வில்சன் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

முன்னதாக, இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் மரிய வில்சன் அவகாசம் கேட்டுவந்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஒரு முறை அவகாசமும் அளித்தது.

பின்னர், உயர்நீதிமன்றத்தில் மரிய வில்சன் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மனுவில், புதுச்சேரி நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கேட்டார்.

ஆனால், கடந்த மாதம் 28ஆம் தேதி அம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி இலட்சுமி நாராயணன், சட்டப்பேரவை நடப்பதால் வழக்கு விசாரணையில் விலக்கு கேட்பதை ஏற்கவில்லை.

அவரென்ன இங்கிலாந்து மாமன்னரா எனக் கேட்டதுடன், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் தன் பதவிக்காலத்திலேடே நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

அதையடுத்து, ஆக.31ஆம் தேதிக்குப் பிறகு, புதுவை நீதிமன்றத்தில் முன்னிலையாவதாக மரிய வில்சன் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதன்படி, இன்று காலையில் அவர் புதுவை நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

முன்னதாக, மரிய வில்சன் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று புதுச்சேரி எழில் நகரில் உள்ள தன் அண்ணன் மரியகுலோத்தின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து, அவரின் அண்ணியையும் அண்ணனையும் தாக்கினார். அதுதொடர்பான காணொலிகள் இன்றும் சமூக ஊடகத்தில் பரவிவருகின்றன.