அமைச்சர் சேகர்பாபு தாணுமாலயன் கோயிலில் வடம்பிடித்து தேர் இழுத்தார் 
தமிழ் நாடு

அமைச்சர் விரட்டியடிக்கப்பட்டாரா?- வடம் இழுத்த படம் வெளியீடு!

Staff Writer

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம், அருள்மிகு தாணுமாலயன் சுவாமி திருக்கோயிலானது 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலின் மார்கழி திருவிழா டிசம்பர் 25 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இன்று விநாயகர், சுவாமி, அம்மன் திருத்தேர்களின் தேரோட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தேரோட்டத்தினை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

அப்போது அமைச்சர் சேகர்பாபுவை நோக்கி ஒரு கும்பல் ஆபாசமாக அர்ச்சனை செய்தது. அமைச்சரும் பதிலுக்கு அவர்களை ஒருமையில் திட்டிய காணொலி சமூக ஊடகங்களில் பரவலாகிவருகிறது. 

இதையொட்டி அமைச்சரை வடம் பிடிக்கவிடாமல் விரட்டியடித்து விட்டதாக குறிப்பிட்ட தரப்பினர் சமூக ஊடகங்களில் பொய் பரப்பிவந்தனர். 

ஆனால் அமைச்சர்கள் பங்கேற்ற படம் வெளியாகியுள்ளது.

அந்த கும்பலில் ஒருவன், வெறியோடு அமைச்சரைப் பற்றி மதவாதக் கூச்சலோடு சிரித்துக்கொண்டே சத்தமிட்ட காணொலி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

இதனிடையே, நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசியது:

”எல்லா வளமும் நலமும் தருகின்ற சுசீந்திரம்அருள்மிகு தாணுமலையான் சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாத தேரோட்டத்தை இன்றைக்கு நானும், இந்த மாவட்டத்தின் அமைச்சர் அண்ணன் திரு. மனோதங்கராஜ் அவர்களும், முன்னாள் அமைச்சர் திரு. சுரேஷ்ராஜன் அவர்களும் பொதுமக்களோடு இணைந்து தொடங்கி வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்த அளவில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு சுமார் 300 திருக்கோயில்கள் திருப்பணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு,  இதுவரையில் 127 திருக்கோயில்கள் குடமுழுக்கு காணப்பட்டிருக்கின்றது. இந்த மாவட்டத்தில் 400 ஆண்டுகளுக்க பிறகு திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், திருவிதாங்கோடு அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் போன்றவை இந்த ஆட்சியில் தான் குடமுழுக்கு காணப்பட்டது. இப்படி வரலாற்று சிறப்புமிக்க கன்னியாகுமரியில் அமைந்திருக்கின்ற திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு கண்ட ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாகும்.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தில்                                         12 திருக்கோயில்களுக்குகு சொந்தமான 20 திருத்தேர்களுக்கு 1.85 கோடி ரூபாய் செலவில் திருத்தேர் பாதுகாப்பு கொட்டகைகள் அமைத்து தரப்பட்டுள்ளது. அதேபோல் 6 திருக்கோயில்களுக்கு சொந்தமான 8 திருக்குளங்கள் 2.19 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளன. அருள்மிகு தாணுமாலயன் திருக்கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் 34.50 இலட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டதில் எதிர்பாராதவிதமாக தடுப்பு சரிவு ஏற்பட்டதால் அந்தப் பணிகளுக்கு மறுமதிப்பீடு தயார் செய்யப்பட்டு ஆணையர் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் ஆணையர் அனுமதி வழங்கப்பட்டு இந்த மாத இறுதிக்குள் அந்தப் பணியினை தொடங்குவோம்.  

பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த நண்பர்கள் ஏப்ரல் மாதம் நடைபெறுகின்ற திருவிழாவிற்குள் திருக்குளத்தை செப்பனிட்டு தெப்பத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்கள்.  போர்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களுடைய எண்ணத்தை நிறைவேற்றுவதற்கு இணை ஆணையாளருக்கு தற்போது உத்தரவிட்டிருக்கின்றோம். இந்த ஆட்சி பொறுப்பேற்ற போது கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு நிதிக்காக 3 கோடி ரூபாய் தான் அரசு மானியமாக வழங்கப்பட்டது. திருக்கோயில்களின் பணியாளர்கள் ஊதியம்,  திருக்கோயில்களில் நடைபெறுகின்ற உற்சவங்கள், திருவிழா கால செலவினங்களை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று படிப்படியாக உயர்த்தி தற்போது ஆண்டிற்கு 18 கோடி ரூபாய் அரசு மானியமாக வழங்கி வருகின்றோம். அந்த வகையில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரையில் 51 கோடி ரூபாய் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் வரும் 490 திருக்கோயில்களுக்கு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதல் தேவைகள் இருப்பின், அவற்றையும் கண்டறிந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசு மானியத்தை பெற்று பக்தர்களின் வசதிக்குண்டான அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம். இந்த திருக்கோயிலில் 2.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இறை அன்பர்களின் வசதிக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது. பொற்கால ஆட்சியின் இந்த  இறைப்பணிகள் தொடரும்.  இறைவனிடம் வழிபடுகின்ற நேரத்தில் பிரிவினைகள் வேண்டாம். இறைவழிபாட்டிலே தகாத கோஷங்கள் எழுப்ப வேண்டாம். இறைவழிபாட்டை அமைதியான முறையில் கடைபிடியுங்கள் என்ற  வேண்டுகோளை தேவையற்ற கோஷங்களை எழுப்பும் நண்பர்களுக்கு துறை சார்ந்த அமைச்சர் என்ற முறையில் பணிவுடன் முன்வைக்கின்றேன்.

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு மாநில வல்லுநர் குழு, தொல்லியல் குழுவின் அனுமதி பெற்ற பிறகு பணிகளை தொடங்க வேண்டும். ஒவ்வொரு திருக்கோயிலும் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைவதற்குள்ளாக குடமுழுக்கு நடத்திட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில் தான் 3,956 திருக்கோயில்களுக்கு இன்று வரை குடமுழுக்கு நடந்திருக்கின்றது. 4000 வது குடமுழுக்காக பிப்ரவரி 8 அன்று சென்னை, வியாசர்பாடி இரவீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. சாலை மட்டத்திலிருந்து தாழ்வாக உள்ள 25 திருக்கோயில்கள் லிப்டிங் முறையில உயர்த்தப்பட்டு வருகின்றது.

கன்னியாகுமரிக்கு வருகின்றபோதெல்லாம் இரணியல் அரண்மனையை பார்வையிட்டு சென்று இருக்கின்றேன். அந்த அரண்மையை பொறுத்தளவில் பழமை மாறாமல் கட்டப்பட வேண்டிய சூழல் இருக்கின்றது. ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் முதலிலேயே 3 கோடி ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் பழமை மாறாமல் கட்டுகின்ற பணிகள் என்பதால் தற்போது  8 கோடி ரூபாயை நெருங்கி இருக்கின்றது. எவ்வளவு விரைவாக அதனை முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களை போலவே எனக்கும் இருக்கின்றது. ஆகவே அந்த பணிகளை விரைந்து முடிப்பதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

கன்னியாகுமரி, அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலை பொறுத்தளவில் பெருந்திட்ட வளாக பணிகளின் (மாஸ்டர் பிளான்) கீழ், 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இராஜகோபுரம் மற்றும் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற்றவுடன் பணிகள் தொடங்கப்படும்.” என்று சேகர்பாபு கூறினார்.

நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் என். சுரேஷ்ராஜன், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் பி. கவிதா பிரியதர்சினி, ஏ. ஜான்சிராணி, உதவி ஆணையர் கே. தங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.