குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்கள்  
தமிழ் நாடு

அரசு இணையதளத்தில் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்கள்!

Staff Writer

தமிழ்நாட்டு அரசின் தகவல்நுட்பத் துறையும் தமிழ் வளர்ச்சித் துறையும் இணைந்து குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்களுக்காக தனி இணையதளப் பக்கத்தை உருவாக்கியுள்ளன. 

தகவல்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் இப்பக்கத்தைத் தொடங்கிவைத்தார். 

தமிழ்ப் பெயர்களுக்கான வலைத்தளம் ஒன்றை உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என எக்ஸ் தளத்தின் வழியாக முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் – அதற்கான பொருள் விளக்கங்களும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் வாயிலாகத் தொடங்கப்படும் என அவர் அறிவித்தார். அதன்படி அன்புக் குழந்தைகளுக்குத் ‘தமிழில் பெயர்கள்’ சிறப்பு இணையப் பக்கம் https://tamildigitallibrary.in/tamilnames குழந்தைகளுக்குச் சூட்டுவதற்கான தமிழ்ப் பெயர்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் கொண்டுள்ளது.

நிகழ்ச்சியில், நாட்டுடைமை நூல்களுக்கான தனி இணையதளப் பக்கத்தையும் அமைச்சர் தொடங்கிவைத்தார்.

தமிழ் வளர்ச்சித் துறை நிதிநல்கையுடன் ‘நாட்டுடைமை நூல்கள்’ சிறப்பு இணையப் பக்கம் https://tamildigitallibrary.in/nationalisedbooks உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு இணையப் பக்கத்தில் 1963 ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையில் நாட்டுடைமையாக்கப்பட்ட ஆசிரியர்களின் வாழ்க்கை வரலாறு முதலிய விவரங்கள், அவர்களின் நூல் தொகுப்புகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இச்சிறப்பு இணையப் பக்கம் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.

மேலும், தமிழ்நாடு பண்பாட்டு மின் நிலவரை ஏடு https://tamilculturalatlas.in திட்டத்தில், முதல் கட்டமாக மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள கோவில்கள், தொல்லியல் தளங்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள், கைவினைக் கலைகள் முதலியவற்றின் விவரங்கள், புகைப்படங்கள், காணொலிகள் ஆகியவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கும் பண்பாட்டு ஆர்வலர்களுக்கும் பயன்படும் வகையில் இத்தளம் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.

தமிழக அரசின் சார்பில் இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.