நெல்லை கவின் ஆணவப் படுகொலை 
தமிழ் நாடு

ஆணவக் கொலை- போலீஸ் பெற்றோரையும் கைதுசெய்ய வேண்டும்: சிபிஎம்

Staff Writer

நெல்லையில் இளைஞர் கவின் சாதி ஆணவப் படுகொலை சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்றவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இதுகுறித்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுக மங்கலம் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த 27 வயதான இளைஞர் கவின் செல்வகணேஷ் திருநெல்வேலியில் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இப்படுகொலையை சிபிஐ (எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். 

”கவின் செல்வ கணேஷ் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்தவர். இவரும் தற்போது சித்த மருத்துவராக பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் சுபாஷினி என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இதற்கு சுபாஷினியின் பெற்றோர்கள் ஒப்புதல் தராமல் தூத்துக்குடி வீட்டை காலி செய்துவிட்டு திருநெல்வேலிக்குக் குடி பெயர்ந்ததாகவும் தகவல்கள் உள்ளன. சுபாஷினியின் பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி இருவரும் முறையே ராஜபாளையம், மணிமுத்தாறு பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

கவின் செல்வகணேஷின் தாத்தா உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுபாஷினியிடம் கலந்தாலோசிக்க அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு கவின் செல்வகணேஷ், அவரது தாயார், தம்பி, மாமா ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது சுபாஷினியின் சகோதரனான சுஜித், தனது பெற்றோர் பேசுவதற்கு அழைத்ததாகக் கூறி கவின் செல்வகணேசை வீட்டு வாசலில் அரிவாளால் சராமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

காவல்துறையினர் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சுஜித் மற்றும் அவரது தந்தை- தாய் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்திருந்தாலும் சுஜித்தை மட்டுமே கைது செய்துள்ளனர். கொலைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இத்தகைய சாதி ஆணவக் கொலைகள் நிகழ்வதும், குறிப்பாக தென்மாவட்டங்களில் வன் படுகொலைகள் அதிகரித்துவருவதும் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் நிகழ்வாகும்.  ஏற்கனவே இருக்கிற கிரிமினல் சட்டங்களே போதுமானது என்கிற அரசின் வாதத்தை தொடர்ந்து நடந்தேறும் சாதி ஆணவக் கொலைகள் புதிய சட்டத்தின் தேவையை வலியுறுத்துகின்றன.

எனவே, தென்மாவட்டங்களில் தொடரும் சாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன்  உடனடியாக சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்றும் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், அரசு வேலையும் வழங்கப்பட வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.” என்று சண்முகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.