திருவண்ணாமலை 
தமிழ் நாடு

இந்த ஆண்டு தீபத்துக்கு 40 இலட்சம் பேர்- என்னென்ன ஏற்பாடுகள்?

Staff Writer

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு இந்த ஆண்டு 40 இலட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என இந்து சமயத் துறை அமைச்சர் சேகர்பாபு எதிர்பார்ப்பைத் தெரிவித்தார்.

கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில்,  வரும் 21ஆம் தேதியன்று அன்று திருவண்ணாமலை அருணாச்சாலேஸ்வரர் கோயிலில் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 07.12.2025 வரை நடைபெறுகின்றது.

03.12.2025 அன்று பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

கார்த்திகை தீபத்திருவிழாவினை சிறப்பாக நடத்திட பல கட்டங்களாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டங்களின் தொடர்ச்சியாக, இன்று திருவண்ணாமலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

அமைச்சர்கள் சேகர்பாபு, வேலு, சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி முன்னிலையில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மாநகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை அலுவலர்கள் இதில் கலந்துகொண்டனர்.

பின்னர், இந்து சமயத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசியது :   

”இந்த ஆண்டு தீபத்திருவிழாவில் சுமார் 40 இலட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றாற்போல் சீரோடும், சிறப்போடும், எந்தவித விரும்பதகாத சம்பவங்களும் நடைபெறாத வகையிலும், பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், கழிப்பிடம், போக்குவரத்து வசதி மற்றும் மருத்துவ வசதி போன்ற அனைத்து வசதிகளையும், முன்னேற்பாடாக செய்திருக்கின்றோம்.  இந்த ஆண்டு போக்குவரத்துத்துறையின் சார்பில் 4,764 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.           

24 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும், 130 இடங்களில் 19,815 கார்களை நிறுத்திடும் வகையில் வாகன நிறுத்துமிடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தீபத் திருநாளன்று பக்தர்கள் தற்காலிக பேருந்து  நிலையம் மற்றும் கிரிவலப்பாதை இடையே பயணிக்க எதுவாக  கட்டணமில்லாமல் 220 தனியார் பள்ளி கல்லூரி  பேருந்துகள் மற்றும் ரூ.10/- என்ற குறைந்தபட்ச கட்டணத்தில் 90 மினி பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

திருக்கோயில் வளாகத்தில் சிறப்பு மருத்துவர்களுடன் 7 மருத்துவக் குழுக்களும், பிற இடங்களில் 90 மருத்துவக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும்,  இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனை  ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் இதய நோய் சிகிச்சை முதலுதவி மையம் அமைக்கப்படுகின்றது.

45 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 430 தீயணைப்பு வீரர்களுடன் 24 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படும். 24 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் ஏற்படுத்தப்படுவதோடு, கூடுதலாக 1,060 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பக்தர்கள் அனைத்து நிகழ்வுகளையும் கண்டுகளித்திடும் வகையில் 26 இடங்களில் பெரிய அளவிலான எல்இடி திரைகள் அமைக்கப்படுகின்றன.

திருக்கோயில் வளாகம், மாநகரப் பகுதிகள் மற்றும் கிரிவலப் பாதையில் 247 இடங்களில் குடிநீர் வசதியும், 141 இடங்களில் 1,163 கழிப்பிடங்கள் அமைக்கப்படுகின்றன. அனைத்து இடங்களில் தேவையான மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குப்பைகளை உடனுக்குடன் அகற்றிடும் வகையில் திருக்கோயில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சியின் மூலம் 1,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றிட நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக பாதுகாப்பு பணிகளில் 15,000 க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மலை உச்சியில் தீபம் ஏற்ற கொண்டு செல்லும் கொப்பரை, நெய், திரி ஆகியவற்றை கொண்டு செல்ல தேவையான பணியாளர்கள், தெய்வங்களை ஊர்வலமாக கொண்டு வரும் பாதம்தாங்கிகள் போன்றவர்களை முன்கூட்டியே திட்டமிட்டு அவர்களோடு கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டை போலவே பாதுகாப்பு சூழல் கருதி குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மிகாமல் பார்த்துக் கொள்வோம். கூடுதலாக தேவை இருப்பின் அளவோடு அனுமதிக்கப்படுவார்கள்.

வெளியிலிருந்து தீபத்தை தரிசிப்பது ஒரு வழி, திருக்கோயிலுக்கு உள்ளே இருந்து தீபத்தை தரிசிப்பது இன்னொரு வழி. இரண்டையும் அளவீடு செய்து எந்த விதமான விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெறாமல் இருக்கின்ற வகையில் அனைவரும் மகிழ்ச்சியோடு தீபத்தை தரிசிப்பதற்கு உண்டான சூழலை உருவாக்கித் தருவோம்.

எந்த அளவிற்கு உள்ளூர் மக்கள் கௌரவிக்கப்படுவார்களோ அந்த அளவிற்கு கௌரவிக்கப்படுவதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வோம்.

திருக்கோயில்களில் நடைபெறும் அபிஷேகங்களில் அனைவரும் பங்கு பெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கின்றது. அதனால் அபிஷேகத்திற்கு அனுமதிக்கும் நபர்களின் எண்ணிக்கையை குறைத்து அபிஷேகங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டிருக்கின்றோம். எல்லோருக்கும் எல்லாம் என நடத்தப்படும் அரசு இது.  

ஆன்லைனில் அபிஷேகத்திற்கான முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன. இதில் தனிப்பட்ட சலுகைகள் என்பது எவருக்கும் இல்லை.  

ஐயப்ப பக்தர்கள் மிகவும் பொறுமைசாலிகள், அமைதியானவர்கள். விரதம் இருந்து தங்களை கடுமையாக பக்குவப்படுத்தி கொண்டவர்கள். ஆகவே அவர்கள் க்யூ வரிசையில் நின்று சுவாமியை பார்ப்பதைத்தான் விரும்புவார்கள்.” என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

அமைச்சர் வேலு பேசுகையில், ” தீபம் ஏற்றும் மலையில் கடந்தாண்டு பெய்த கனமழையின் காரணமாக மலையில் ஈரப்பதம் அதிகமாகி அதன் உறுதித் தன்மை குறைந்து பாறை எல்லாம் இறங்கிவிட்டது. இதுகுறித்து சென்னை ஐஐடி மூலம் கருத்துரு பெறப்பட்டதை தொடர்ந்து, தலைமை செயலாளர் மூலமாக குழு அமைக்கப்பட்டு பாதுகாப்பு நலன் கருதி யாரும் மலையின் மேல் ஏறக்கூடாது என்ற நிலை ஏற்பட்டது. இன்று காலை முதல் மழை பெய்து கொண்டிருக்கிறது; இந்த மழை எப்படி தொடரும் என்று சொல்ல முடியாத நிலையில் தீபத் திருவிழாவின்போது மலையின் உறுதித் தன்மையை முடிவு செய்து தான் ஆன்மிக மக்களை அனுமதிப்பதா, இல்லையா என்பது முடிவு செய்ய முடியுமே தவிர இப்போது சொல்ல முடியாது.” என்று கூறினார்.