நாடாளுமன்றம் 
தமிழ் நாடு

ஈரோட்டில் ஜவுளிக் கழிவு மேலாண்மை-மாநிலங்களவையில் அந்தியூர் செல்வராசு கேள்வி

Staff Writer

ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களை உருவாக்கும் தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் ஜவுளிக் கழிவுகளை அகற்றுவது குறித்து ஒன்றிய அரசின் நடவடிக்கை என்ன என்றும் மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் அந்தியூர் செல்வராசு கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டவிரோத கழிவு மேலாண்மைக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான கழிவு மேலாண்மையை வலுப்படுத்தவும், மாசுபாட்டைக் குறைக்கவும் அரசு முன்மொழிந்துள்ள திட்டங்கள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.

அக்கட்சியின் இன்னொரு ஆர். கிரிராஜன், “ஜல் சக்தியின் பல்வேறு திட்டங்களின்கீழ் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியுள்ள நிதி எவ்வளவு? நீர்நிலைகள் மற்றும் தொட்டிகளை புதுப்பித்தல், நீர் சேமிப்பை மேம்படுத்துதல், வெள்ளத்தைத் தடுத்தல், நீர்ப்பாசனத்தை மேம்படுத்துதல் தொடர்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் என்ன? நீர் தர பரிசோதனை ஆய்வகத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு ஏதேனும் நிதி ஒதுக்கப்படுகிறதா?” எனக் கேள்விகளைக் கேட்டதுடன்,

“பொது மக்களுக்கு நீர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கள நீர் பரிசோதனை கருவியை வழங்க வேண்டும்.” என்றும் கேட்டுக்கொண்டார். 

தனது மற்றொரு கேள்வியில், ”உஜ்வாலா திட்டத்தின்கீழ் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்ட மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை குறித்தும் இத்திட்டத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட இணைப்புகளின் எண்ணிக்கை என்ன என்றும் கிரிராஜன் கேட்டுள்ளார்.

எல்பிஜி துறையில் நடக்கும் ஊழலை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.