முக ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

எடப்பாடி பழனிசாமி சொன்னார்; ஸ்டாலின் செய்தார்... அம்மா உணவகம் மூலம் உணவு!

Staff Writer

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையைத் தொடர்ந்து, சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியவர்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இன்று காலையில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.” என்று தெரிவித்துள்ளார்.

”இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்.” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முன்னதாக, நேற்று பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தாழ்வான பகுதிகளில் முகாம்கள் மூலம் உணவு வழங்குவது போதாது; மற்ற பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அம்மா உணவகம் மூலம் தங்கள் ஆட்சியின்போது இலவசமாக மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டது என்றும் அதைப்போல உணவு தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram