” மாணவர் போராட்டங்களைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதா?
இதற்கான வேர் எங்கே இருக்கிறது?
இன்னும் வெளிவராத சுற்றறிக்கைகள் உண்டா? தமிழ்நாடு அரசு எந்தத் திசையில் செல்கிறது?” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :
” தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வித் துறை சார்பில் அரசு கடித ந.க.எண்1075/A1/2026-1 (நாள்: 14.08.2026) மூலம் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே துறை இடைத்தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நடவடிக்கைகளை மேற்கொண்டு, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரத்தை கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்புமாறு கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் கையொப்பமிட்ட சுற்றறிக்கை (ந.க.எண்:TNDCE/5658/2025-Q1) ஒன்று 17.8.2026 அன்று அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்துத் தகவல் அறிந்ததும், ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், உடனடியாகத் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டனம் தெரிவித்தோம்.
மாணவர்கள் தங்கள் உரிமைக்காகவும், ஜனநாயக உரிமைக்காகவும் போராடுவது உலகம் முழுவதும் உள்ள நடைமுறை. ஒவ்வொரு நாட்டின் அரசியல் மாற்றங்களை உண்டாக்கியது இத்தகைய போராட்டங்கள் தான். தமிழ்நாட்டிலேயே இதற்கு 1938 ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், 1950-1951 வகுப்புரிமை நாள் போராட்டங்கள் தொடங்கி அண்மைக் காலமாக நடைபெற்றுவரும் தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு வரை தொடர்கிறது.
இந்நிலையில் மாணவர்கள் போராட்டங்களைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவது எல்லாம் இதுவரை தமிழ்நாட்டில் நடைபெறாத ஒன்று. ஜனநாயக உரிமையை மறுக்கும் செயல்!
அத்தகைய நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்ததும், இன்று (19.08.2026) சற்று முன் அந்தச் சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுவதாக (ந.க.எ . TNDCE/5658/2025-Q1, நாள்:19.08.2026) அறிவிக்கப்பட்டுள்ளது.
வட்டாட்சியர் தானாக விடுத்த அறிவிப்பா?
அல்லது அரசின் வருவாய்த் துறை கோரிய விவரமா?
அதே போல, நேற்று (18.8.2026) குஜிலியம்பாறை வட்டாட்சியர் விடுத்த சுற்றறிக்கை ஒன்றில், அந்தப் பகுதியைச் சேர்ந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து, வழங்கக் கோரியும், அப்படி வழங்காத வி.ஏ.ஓ.க்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்குக் கண்டனம் வந்ததும், இப்போது அந்த வட்டாட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அது வட்டாட்சியர் தானாக விடுத்த அறிவிப்பா? அல்லது அரசின் வருவாய்த் துறை கோரிய விவரமா?
இனியும் தொடரக் கூடாது;
தவிர்க்கப்பட வேண்டும்!
பிரச்சாரங்களுக்கும், அறவழிப் போராட்டங்களுக்கும் அனுமதி மறுப்பது, எதிர்ப்பு எழுந்ததும் பின்னர் கொடுப்பது, மாணவர் போராட்டங்களைத் தடுப்பது, பின்னர் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றுவது, குஜிலியம்பாறை வட்டாட்சியரின் சுற்றறிக்கை, பின்னர் அதற்காக இடமாற்றம் என்று தமிழ்நாடு அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் இனியும் தொடரக் கூடாது. தவிர்க்கப்பட வேண்டும்.
அதே நேரத்தில், உரிமைக்காகப் போராடுவோரைக் கண்காணிக்கவும், மாணவர் போராட்டங்களைத் தடுக்கவும் வெளிவரும் ஆணைகள், சுற்றறிக்கைகளின் வேர் எங்கே இருக்கிறது என்பதை இந்த அரசு கண்காணித்துக் கண்டுபிடிக்க வேண்டும்; தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் பார்வைக்கு வெளிவந்துவிட்ட சுற்றறிக்கைகள் இவையென்றால், இன்னும் வெளிவராதவை எவ்வளவு என்னும் சந்தேகம் பலருக்கும் எழுவதைத் தடுக்க முடியவில்லை.
இந்த அரசே இடதுசாரிகளின் ஆதரவினால் அமைந்தது, தொடர்கிறது என்பதை யாரும் தனியாகச் சுட்டிக்காட்ட வேண்டியதில்லையே! தமிழ்நாடு அரசு எந்தத் திசையில் செல்லுகிறது?” என்று கி.வீரமணி கூறியுள்ளார்.