கோப்புப் படம் 
தமிழ் நாடு

எப்படிங்க இந்த நிவாரணம் போதும்?- விவசாயிகள் கேள்வி!

Staff Writer

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மூன்று மாவட்ட புயல் வெள்ள நிவாரணம் குறைவானது என்றும் அதை உயர்த்தித் தரவேண்டும் என்றும் விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி நடராஜன் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில், பாதிப்புகளின் விவரத்தைப் பட்டியலிட்டுள்ளார். 

“தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரகாலமாக பெய்த தொடர் கனமழை மற்றும் ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்து போயுள்ளன. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவு 51 செ.மீ பெரு மழை பெய்து பல ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு சாகுபடி நிலங்களில், வீடுகளில் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் வடியவே பல நாள்கள் ஆகும்.” என்று அவர் கூறியுள்ளார். 

இந்நிலையில் தமிழக அரசு வெள்ள நிவாரண அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

“வரலாறு காணாத வெள்ள பாதிப்பும், சேதாரமும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சமாக உயர்த்தியும், மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உட்பட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 17 ஆயிரம் வழங்கப்படும் என்று குறைவான தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. நெற்பயிருக்கான இழப்பீட்டை மாநில அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும்.

பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.50000ம், மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.25000/ ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். எருது, பசு உள்ளிட்ட கால்நடைகள், ஆடு மற்றும் கோழிகள் இறந்து போனவற்றிற்கு மாநில அரசு இழப்பீட்டை மேலும் உயர்த்தி வழங்கிட வேண்டும்.

வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 5000 வழங்கிட வேண்டும் என மாநில அரசை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. டெல்டா மாவட்டங்கள் உட்பட புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும், மக்களுக்கும் மாநில அரசு உடனே இழப்பீடு வழங்கிட வேண்டும்.” என்று சாமி நடராஜனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.