மாணிக்கம் தாகூர் எம்.பி.  
தமிழ் நாடு

ஒரு நல்ல தொடக்கம்- மாணிக்கம் தாகூர் அறிக்கை

Staff Writer

”தமிழகத்தின் ஜீவாதாரமாக விளங்கும் வேளாண்மை வலுவாக இருந்தால்தான் மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் உறுதியாகும். அந்த வகையில், 2026-27 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு வேளாண் வரவு-செலவுத் திட்டம், பாரம்பரிய வேளாண்மையை தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் நிலைத்தன்மையுடன் இணைத்து எதிர்காலத்தை நோக்கி நகர்த்தும் ஒரு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது.” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். 

இது தொடர்பாக சற்றுமுன்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

”காவிரி நீரை உரிய காலத்தில் பெற முடியாததால் டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,509 கிலோமீட்டர் நீளமுள்ள சி மற்றும் டி கால்வாய்களை தூர்வார ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும், ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு 8.26 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்று வருவதும் வரவேற்கத்தக்க நடவடிக்கைகளாகும். மேலும், பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.648 கோடி மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும், இலவச மும்முனை மின்சாரத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதற்கான நிதி ஒதுக்கீடும் விவசாயிகளுக்கு நம்பிக்கையளிக்கிறது.

இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையின் மிகப்பெரிய சிறப்பு, தொழில்நுட்பத்தை விவசாயிகளின் கைகளுக்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். செயற்கை நுண்ணறிவு (யுஐ) அடிப்படையிலான “உழவர் யுஐ” சேவை மூலம் வானிலை, மண் வளம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, சந்தை நிலவரம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் எதிர்கால வேளாண்மைக்கு மிக முக்கியமான முன்னேற்றமாகும்.

தஞ்சையில் இயற்கை வேளாண்மையின் முன்னோடியான நம்மாழ்வார் அவர்களின் பெயரில் உயிர்ப் பண்ணை வேளாண் கல்லூரி அமைப்பது, ‘வெற்றி வான்மகள்” திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ட்ரோன் பயிற்சியும் 50 சதவீத மானியத்தில் ட்ரோன்களும் வழங்குவது, மகசூல் திறனை ஊக்குவிக்கும் வகையில் ‘மக்கள்தொண்டர் அஞ்சலை அம்மாள்” விருதுகளை அறிவித்திருப்பது ஆகியவை மிகவும் பாராட்டத்தக்க முன்னெடுப்புகளாகும்.

அதேபோல், ரூ.600 கோடியில் ஐந்தாண்டு தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம், இயற்கை மற்றும் உயிர்ம வேளாண்மைக்கு ஊக்கம், பருத்தி மறுமலர்ச்சி இயக்கம், வேளாண் காடுகள் திட்டம், கார்பன் வர்த்தகத்தின் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள், சிறுதானியங்கள், பயறு மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களின் உற்பத்தியை உயர்த்தும் திட்டங்கள் ஆகியவை தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கு புதிய திசையைக் காட்டுகின்றன.

வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தைத் தடுக்கும் தனித்திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழலுக்கு உகந்த காட்டுப்பன்றி விரட்டி, சூரிய சக்தி மின்வேலி, சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

மேலும், மானிய விலையில் விதை விநியோகம், சூரிய சக்தி பம்பு செட்டுகளுக்கு உயர்ந்த மானியம், அறுவடைக்குப் பிந்தைய தானியப் பாதுகாப்பு, பயிர் விளைச்சல் போட்டிகள் போன்ற பல்வேறு அறிவிப்புகள் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதோடு, வேளாண்மையை லாபகரமான தொழிலாக மாற்றும் நோக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன.

அதே நேரத்தில், நீர் மேலாண்மை, புதிய நீர்ப்பாசனத் திட்டங்கள், ஏரிகள் மற்றும் கால்வாய்களின் நீண்டகால மறுசீரமைப்பு, மழைநீர் சேமிப்பு உள்ளிட்ட துறைகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற எண்ணமும் உள்ளது.

மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் 2026-27 வேளாண் வரவு-செலவுத் திட்டம், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் நிலைத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட நவீன வேளாண்மைக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் விரைந்து, முழுமையாக செயல்படுத்தப்பட்டு ஒவ்வொரு விவசாயியையும் சென்றடைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.” என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.