இராமேசுவரம் பாம்பன் கடல் பகுதியிலிருந்து இலங்கை மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற நாட்டுப்படகு மீனவர்களின் வலையில் 112 கிலோ எடை கொண்ட மஞ்சள் வால் கேரை மீன் ஒன்று கிடைத்தது.
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் வடக்கு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று 50-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீனிபிடிக்குச் சென்றனர்.
வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டுவரும் நிலையில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் உள்ளூர் சந்தையில் விற் பனை செய்யப்படும் நகரை, பாரை, நெத்திலி ஆகிய மீன்களும், கிளர்த்தி, சீலா, மாவுலா, கிளி, பாறை. முண்டகண்ணி பாறை, கட்டா, சூவாரை ஆகிய வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் வரத்து எதிர்பார்த்ததைவிடக் கூடுதலகாகக் கிடைத்ததும், மீனவர்கள் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகினர்.
பாம்பன் அந்தோனி யார்புரம் பகுதியைச் சேர்ந்த கிளிண்டன் என்பவருக்குச் சொந்தமான வலையில் சுமார் 3 மீட்டர் நீளம் கொண்ட 112 கிலோ எடை கொண்ட மஞ்சள் வால் கேரை மீன் என்றழைக்கப்படும் அம்பரஜாக மீன் ஒன்று சிக்கியது.
இந்த மீனை, கேரளா வியாபாரி ஒருவர் கிலோ 150 ரூபாய் என 17 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக்கொண்டார். அதாவது, ஒற்றை மீன் 17 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
பொதுவாக, மஞ்சள் வால் கேரை மீனுக்கு எங்கள் மாநிலத்தவரிடையே நல்ல வரவேற்பு உண்டு; இதை அரை கிலோ, ஒரு கிலோ என விற்பனை செய்துவிடுவேன் என்று கேரளத்து வியாபாரி தெரிவித்தார்.
இந்த வகை மீன், வால் பகுதியில் மஞ்சள் நிறத்தில் தட்டையான கத்தி போன்ற அமைப்பு காணப்படும். இவை வேகமாக இடப் பெயர்ச்சி செய்யக்கூடியவை.
இந்த மீன், அட்லாண்டிக், பசிபிக், இந்திய பெருங்கடலில் ஆழமான பகுதியில் வாழக்கூடியது என்கிறார்கள்.
மூன்று மீட்டர் முதல் அதிகபட்சம் 4.55 மீட்டர்வரையும், 550 கிலோ எடை வரையும் வளரக் கூடியது என்றும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.