தமிழ் நாடு

ஒழுங்கா படிச்சிட்டு வாங்க ஆளுநர் சார்!

Staff Writer

மார்க்சிய அரசியல் கருத்தாளர்கள் நாட்டு விடுதலைக்குப் பிறகு இந்திய நாகரிகத்தை, கலாச்சாரத்தை அழித்துவருகின்றனர் என்று ஆளுநர் ஆர்.என்.இரவி பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. பல்வேறு கம்யூனிஸ்ட் அமைப்புகளும் கட்சிகளும் ஆளுநரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகமும் இதுகுறித்து தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.

தன் சமூக ஊடகப் பக்கங்களில் அவர் இன்று காலையில் வெளியிட்டுள்ள பதிவில், “பசுவையும் குரங்கையும் கும்பிடுவது தான் சிறந்த நாகரிகமா? அதை கம்யூனிஸ்ட்கள் அழித்து விட்டோமா? அத்தகைய மூடத்தனத்திலிருந்து முழுமையாக மக்களை விடுவிக்க முடியவில்லையே என்பதுதான் எங்கள் வருத்தமே!” என்று சண்முகம் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், “ பிரிட்டிஷ் கொடுங்கோன்மை ஆட்சிக்கு அடிமைச் சேவகம் செய்து கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். கும்பலின் வாரிசான ஆளுநர் ஆர்.என்.ரவி காரல் மார்க்ஸ் குறித்து பேச அருகதையற்றவர் அறிவும் அற்றவர்

மாமேதை காரல் மார்க்ஸ் அவர்கள் இந்தியா குறித்து எழுதியதை அரைகுறையாக படித்துவிட்டு இருட்டடிப்பு செய்து நேற்றைய நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

ஒழுங்கா படிச்சிட்டு வாங்க சார்.” என்றும் பெ.சண்முகம் தன் சமூக ஊடகப் பக்கங்களில் கருத்திட்டுள்ளார்.