தி.மு.க. இளைஞர் அணியின் கூட்டங்களில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் துணைமுதலமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு வருகிறார். சென்னையில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் தென்மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகையில், புதிய நிர்வாகிகளுக்கும் மூத்த நிர்வாகிகளுக்கும் அறிவுரைகளை வழங்கினார்.
கூட்டத்தில் அவர் பேசியதிலிருந்து..:
”இளைஞர் அணியிலிருந்து வந்தவர்தான் இன்றைக்கு அமைச்சர்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக, மாவட்ட- ஒன்றிய- நகர- பகுதிச் செயலாளர்களாக இருக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகவும் இன்றைக்கு பல பேர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். கழகத்திற்கு நம் தலைவரைக் கொடுத்ததும் இந்த இளைஞர் அணிதான். அப்படிப்பட்ட ஒரு சிறப்பு வாய்ந்த அணிக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். ஆகவே, நீங்கள் உழைக்கத் தயாராக இருந்தால், நாங்கள் உங்களை உயர்த்த தயாராக இருக்கிறோம்.
ஏதோ பொறுப்பு வாங்கி விட்டோம், நான்கு ஃபிளக்ஸ் பேனர் வைத்து விட்டோம், போஸ்டர் அடித்து விட்டோம், போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டோம் என்பது மட்டும் நம் வேலை கிடையாது. உங்களின் ஒவ்வொரு பணியையும் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற மினிட் புக்கில் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். நீங்கள் நடத்துகின்ற நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, நீங்கள் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அவற்றையெல்லாம் மினிட் புக்கில் தயவு செய்து நீங்கள் பதிவு செய்யுங்கள். நாளைக்கு யாராவது உங்கள் மீது குறை சொன்னார்கள் என்றால், இவர் எந்த நிகழ்ச்சிக்கும் வரவில்லை, எந்த நிகழ்ச்சியையும் இவர் நடத்தவில்லை என்று யாராவது சொன்னால், அதை மறுத்து நீங்கள் செய்த பணிகளை நிரூபிக்க உங்களிடம் இருக்கின்ற ஒரே ஆதாரம் மினிட் புக் தான். ஆகவே மினி புத்தகங்களை நீங்கள் சரியாக பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு சிறு தவறுக்கு கூட நீங்கள் இடம் கொடுக்கக்கூடாது. இன்றைக்கு இருக்கின்ற தொழில்நுட்ப யுகத்தில் எல்லோர் கையிலும் அலைபேசி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் நம் இளைஞர் அணியைப் பற்றி பேசுவதற்கு ஏதாவது ஒரு சின்ன தவறு கிடைத்துவிடாதா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது அவதூறு படம் பரப்ப வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் நீங்கள் உணர வேண்டும்.
இங்கு இருக்கின்ற ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்பில் உங்கள் கட்டுப்பாட்டில் நூறு வாக்குகளை வைத்து இருந்தீர்கள் என்றால், உங்களை யாராலும் தவிர்க்க முடியாது. நீங்கள் சொன்னால் நூறு பேர் கழகத்திற்காக வாக்களிப்பார்கள் என்ற நிலைமையை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
எந்தப் பணியை செய்தாலும் அதை மாவட்டப் பகுதிக் கழகச் செயலாளர்களிடம் சொல்லிவிட்டு, அவர்களின் ஆலோசனை பெற்று செய்ய வேண்டும். அதேபோல் மாவட்டச் செயலாளர், பகுதி செயலாளர்களின் அனுமதியையும் வாங்க வேண்டும். சமூக வலைதளங்களிலும் நீங்கள் துடிப்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
உங்களுக்கு அன்பகத்திலிருந்து வரும் அறிவுரைகளைப் பின்தொடருங்கள். தலைவரின் பக்கம், நம் இளைஞர் அணி பக்கம், மாவட்டச் செயலாளர் பக்கத்தைத் தொடர்ந்து பின்பற்றுங்கள். அப்போதுதான் கழகம் என்னென்ன செய்து கொண்டிருக்கிறது, இன்றைக்கு தலைவர் அவர்கள் என்னென்ன அறிக்கை விட்டிருக்கிறார்கள், தலைவர் என்ன சொல்லியிக்கிறார் என்பதை, மக்களிடம் நீங்கள் கொண்டுபோய் சேர்க்க முடியும்.
தயவுசெய்து தினமும் முரசொலியைப் படியுங்கள். முரசொலியில் வருகின்ற கடைசி பக்கம் இளைஞர் அணிக்கான பக்கம். `பாசறைப் பக்கம்’ என்று வந்து கொண்டிருக்கிறது. அதையெல்லாம் நீங்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். இங்கே நிர்வாகிகளின் பெயர்களைச் சொல்லும் போது கைதட்டி விசில் அடித்தீர்கள். முழக்கம் போட்டீர்கள். உணர்வுபூர்வமாகக் கத்துகிறீர்கள், ஆனால், நாம் அதற்காகக் கூடிய கூட்டம் கிடையாது, நம் கழகத்தின் வரலாற்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.” என்று உதயநிதி பேசினார்.