ஓய்வூதியக் குழு தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலகப் பணியாளர்கள் இன்று கருப்புப் பட்டை அணிந்து பணிக்கு வந்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2022ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி அன்று சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பில் முக்கியமானது, மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையிலான ஓய்வூதியக் குழு. பழைய ஓய்வூதியமா புதிய ஓய்வூதியமா எதைச் செயல்படுத்தலாம் என அரசுக்கு யோசனை கூறுவது அந்தக் குழுவின் பணி.
கடந்த 30-09-2025க்குள் அந்தக் குழு தன் அறிக்கையை அரசுக்கு வழங்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதே நாளில் அக்குழுவின் இடைக்கால அறிக்கை மட்டுமே அரசிடம் வழங்கப்பட்டது எனத் தகவல் வெளியானது.
அதைப் பற்றிய எந்த விவரமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், முழு அறிக்கையையும் வெளியிடாததைக் கண்டித்து தலைமைச்செயலகப் பணியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், தலைமைச் செயலகப் பணியாளர் சங்கத்தினர் இன்று கருப்புப் பட்டையை அணிந்து பணிக்கு வந்தனர்.