சிபிஐஎம் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர்  
தமிழ் நாடு

கரும்பின் கணுக்களில் நம்பிக்கையின் வேர்கள் - பெ.சண்முகம் வாழ்த்து

Staff Writer

பிறக்கிற தை வாழ்க்கையை வளமாக்கட்டும் என அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவரின் வாழ்த்துச் செய்தி :

”பூவுலகின் அனைத்துக் கண்டங்களிலும் விரிந்து பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சாதி, மதங்களைக் கடந்து அனைத்துப் பகுதி மக்களாலும் கொண்டாடப்படும் திருநாளாக பொங்கல் திருநாள் விளங்குகிறது. மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் வெறுப்பு அரசியல் வளர்க்கப்படுகிற இன்றைய சூழலில், மக்கள் ஒற்றுமையும், மதநல்லிணக்கமும் பொங்கிப் பெருகட்டும் என்றும் வாழ்த்துகிறோம்.

உழவுத் தொழிலை ஒரு பாவத் தொழில் என்று மநுஅதர்மம் விலக்கி வைத்த சூழலில் உழவே தலை என்று மனிதகுலத்தின் ஆதித் தொழிலான உழவுத் தொழிலை உச்சி மேல் வைத்து மெச்சிப் போற்றுகிறது திருக்குறள். ஞாயிறு போற்றுதும், திங்களைப் போற்றுதும் மாமழைப் போற்றுதும் என்று இயற்கையை கொண்டாடுகிறது சிலப்பதிகாரம்.

உலகம் முழுவதும் அறுவடையின் துவக்கம் பல்வேறு வழிகளில் விழாவாக கொண்டாடப்படுகிறது. தைத் திருநாளான பொங்கல் திருநாளும் அறுவடையின் துவக்கமாக திகழ்கிறது. அறுவடை செய்த தானியங்களை அடுத்த போக சாகுபடிக்கு விதையாக எடுத்து வைப்பது உழவர்களின் வழக்கம். ஆனால், வேளாண் பெருமக்களின் விதை உரிமையையும் பறிக்க முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு. விதை என்பது ஒரு சமூகத்தின் வரலாறு, அடையாளம், உணவு பாதுகாப்பு, நாட்டின் இறையாண்மையோடு தொடர்புடைய ஒன்று. ஆனால், விதை எனும் பெரும் சொத்து ஆதாரத்தை விவசாயிகளிடமிருந்து பறித்து, பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கும் வகையில் சட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. மறுபுறத்தில், அனைத்து வகையான மரபணு மாற்றம் செய்யப்பட்ட தானிய வகைகளையும் முழுமையாக இந்தியா இறக்குமதி செய்ய வேண்டும் என்று அமெரிக்க வல்லரசு நிர்பந்தம் செய்கிறது. இந்த அநீதிக்கு வளைந்து கொடுக்க துணிந்துவிட்டது ஒன்றிய மோடி அரசு. இது இந்திய வேளாண்மையின் வேரில் வெந்நீர் ஊற்றும் கொடும் செயலாகும்.

தேசப்பிதா மகாத்மா காந்தியை படுகொலை செய்த கருத்தியலின் வாரிசுகள் நூறுநாள் வேலைத் திட்டத்திலிருந்து அண்ணல் காந்தியின் பெயரை அகற்றியிருப்பதோடு, அந்த திட்டத்தையும் சீர்குலைத்து வருகின்றனர். இது கோடானு கோடி விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகும். உழவையும், உழவர்களையும் பாதுகாக்க சமரசமற்ற சமரை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது.

வாசலை அலங்கரிக்கிற வண்ணக் கோலம் போல, பன்முகப் பண்பாடே இந்திய திருநாட்டின் வலிமையும் வளமையும் ஆகும். ஆனால், பன்முக பண்பாட்டை சிதைத்து ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என தட்டையான ஒற்றைத் தன்மையை நாள்தோறும் திணிக்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழர் திருநாளாகவும் சிறப்பிக்கப்படுவது தைப் பொங்கல் திருவிழாவாகும். ஆனால், அரசியல் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளை இந்தியாவின் அலுவல் மொழியாக்குவதற்கு மறுக்கும் ஒன்றிய எதேச்சதிகார அரசு, சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழித்திணிப்பில் மூர்க்கம் காட்டுகிறது. கீழடி அகழ்வாய்வு முடிவுகளை வெளியிடக்கூட மறுக்கும் ஒன்றிய ஆட்சியாளர்கள் மறுபுறத்தில் தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் அக்கறையில் இருப்பது போல பகல் வேஷம் போடுகிறார்கள்.

புதியன புகுதலும் பழையன கழிதலும் வாழ்க்கை நீரோட்டத்தில் தவிர்க்க முடியாதவை. ஆனால், பத்தாம் பசலித்தனமான மூடநம்பிக்கைகளையும் பிற்போக்கு சிந்தனைகளையும் மதத்தின் பெயராலும், புராணங்களின் பெயராலும் மறுஉருவாக்கம் செய்து, வரலாற்றுச் சக்கரத்தை பின்னோக்கி செலுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு.

ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி உள்ளிட்ட விழுமியங்களைக் கொண்ட அரசியல் சட்டத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் சாதிய அநீதிகளை நியாயப்படுத்தும் மநுஅநீதியை கோலோச்ச செய்ய துடிக்கிறார்கள்.

இயற்கை வளத்தை பன்னாட்டு நிறுவனங்களின் கோரப்பசிக்கு இரையாக்கி வருவதால், பூமியின் ஆயுட்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. இயற்கையை அழிப்பது என்பது மனிதகுலத்திற்கே முடிவு கட்ட முயலும் கொடும் செயலாகும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. ஒளியை ஒழித்துவிட்டு, இருட்டை திணிக்க முயல்கிறது பிற்போக்கு கூட்டம். இதை ஒருபோதும் அனுமதிக்க இயலாது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிற சோசலிச சமூகத்தை படைப்பதன் மூலமே பசியில்லாத, கல்லாமை இல்லாத, பாலின வேறுபாடுகள் இல்லாத, கல்வியையும் சுகாதாரத்தையும் வேலைவாய்ப்பையும் பொதுவில் வைக்கிற சமூகத்தை உருவாக்க முடியும். கரும்பின் கணுக்களில் நம்பிக்கையின் வேர்கள் துளிர்த்து நிற்கிறது. அநீதிகளை அழிக்கிற புதிய புதிய போராட்டங்கள் வெடித்துக் கிளம்பி வெளிவந்தே தீரும்.” என்று பெ.சண்முகம் தன் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.