கரூர் துயர சம்பவம் தொடர்பாக ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பேசிய கூட்டத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டு, 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இந்தக் கொடூர சம்பவத்தால் மாநிலமே பெரும் அதிர்ச்சி அடைந்தது. இதில் விஜய்யைத் தவிர அவர் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, சி.டி.நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதில், தனக்கு முன்பிணை வழங்குமாறு ஆனந்த் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கூட்ட நெரிசல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதை நீதிபதி செந்தில்குமார் இன்று பிற்பகலில் விசாரித்தார்.
இவ்வழக்கில், த.வெ.க. தரப்பை நீதிபதி சரமாரியாகக் கேள்விகளால் துளைத்து எடுத்துவிட்டார்.
பொறுப்பில்லாமல் மக்களைக் கைவிட்டுச் சென்றதாக அவர் கடுமையாகச் சாடினார்.
த.வெ.க.வுக்குத் தலைமைப்பண்பே இல்லை எனவும் அவர் கூறினார்.
சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்றும், விஜய் மீது வழக்குகூட ஏன் பதியவில்லை என்றும் அவர் கேட்டார்.
இந்த வழக்கை விசாரிக்க, வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.