எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

கர்நாடக அரசுக்குச் சார்பாக தி.மு.க. அரசு செயல்படுகிறது - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Staff Writer

காவிரி மேலாண்மை ஆணையத்தில் கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்ற நிகழ்வுகளை, உடனடியாக உச்சநீதிமன்றம் செல்லாமல் தமிழக அரசு தாமதம் செய்ததைப்  பயன்படுத்திக்கொண்ட கர்நாடக காங்கிரஸ் அரசு, மேகதாது அணை கட்ட அறிவித்திருப்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பை வெளிப்படையாகவே மீறுவதாகும் என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில், “இன்னும் எதற்காக திமுக அரசு காத்திருக்கிறது என்பது உண்மையிலேயே புரியவில்லை. நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின், கர்நாடகத்தில் தங்களது குடும்பத் தொழில்கள் பாதிக்கப்படுமோ என்றும், கூட்டணி காங்கிரஸ் உறவுக்காக தமிழகத்திற்கு மீண்டும் ஒரு துரோகத்தை அரங்கேற்ற நினைக்கிறார்.” என்று சாடியுள்ளார்.

மேலும், ”இதுகுறித்து பலமுறை நான் அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் விரிவாகப் பேசியும், அதற்கு பதில் அளிக்காமல், உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது தமிழக மக்களுக்கு திமுக அரசு மிகப் பெரிய துரோகம் செய்துவருகிறது. ஆணையம் அதன் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டு மேகதாது அணை குறித்த பொருளை (அஜண்டாவை) 28-ஆவது ஆணையக் கூட்டத்தில் எடுத்துக்கொண்டது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்.” என்றும், 

”கர்நாடக காங்கிரஸ் அரசுக்குச் சாதகமாக ஆணையத்தின் தலைவர் அந்தப் பொருளை அனுமதித்ததோடு, அதை மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியது மிகப் பெரிய தவறு. இந்த ஆணையக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை கவனமாக அனுப்பிவைத்து அதை எதிர்க்காமல், தமிழகத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுக்க திமுக அரசு அனுமதித்தது.

காவிரி நதிநீர் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால், 20 மாவட்டங்களில் குடிநீர்ப் பிரச்சனை ஏற்படும். டெல்டா மாவட்டங்கள் விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி பாலைவனமாகும்.

மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு உடனடியாகப் கைவிட வேண்டும். தவறினால், தமிழகத்திற்கு துரோகத்தை செய்யத் துணியும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், கைகட்டி வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகளையும் கண்டித்து, பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும்.” என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.