கர்நாடக சட்டப்பேரவை 
தமிழ் நாடு

கர்நாடக ஆளுநர் உரை- மு.க.ஸ்டாலின் கருத்து!

Staff Writer

சட்டமன்றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முடிவுகட்டும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவர தி.மு.க. போராடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கர்நாடகத்திலும் ஆளுநர் உரை விவகாரம் ஆகியுள்ள நிலையில், அதைப் பற்றி ஸ்டாலின் தன் சமூக ஊடகப் பக்கங்களில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “ முதலில் தமிழ்நாடு, அடுத்து கேரளம், இப்போது கர்நாடகா. இதன் நோக்கம் தெளிவானது, வேண்டுமென்றே செய்வது.

மாநில அரசுகள் தயாரித்தளிக்கும் உரையை ஆளுநர்கள் வாசிக்க மறுத்து, குறிப்பிட்ட கட்சியின் முகவர்கள் போல நடந்துகொள்வது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைச் சிறுமைப்படுத்தும் செயலாகும்.

நான் முன்பே தெரிவித்தபடி, சட்டமன்றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முடிவுகட்டுவதே இதற்கான தீர்வாக அமையும்.

இந்தியா முழுவதும் இந்தக் கருத்தைக் கொண்டிருக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளோடும் கலந்தாலோசித்து, வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இந்தப் பயனற்ற, நடைமுறைக்குப் பொருந்தாத வழக்கத்தை ஒழிப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரத் தி.மு.க. போராடும்.” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.