கறிக்கோழி பண்ணையாளர் சங்கக் கூட்டம்  
தமிழ் நாடு

கறிக்கோழி வளர்ப்பு- முத்தரப்புக் கூட்டத்துக்கு விவசாயிகள் வலியுறுத்தல்!

Staff Writer

தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஜனவரி 20 அன்று மாநிலம் முழுவதும் மனுக்கொடுத்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ விவசாயிகள் நிறுவனங்களிடம் இருந்து குஞ்சுகளை இறக்கி கோழியை வளர்த்துக் கொடுக்கிறார்கள். ஆனால் விவசாயிகளுக்கு உரிய கூலியை நிறுவனங்கள் தருவதில்லை.  ஒரு கிலோ கோழி வளர்ப்புக்கு குறைந்த பட்ச கூலியாக  ரூ.6.50 மட்டுமே தரப்படுகிறது. பல ஆண்டுகளாக வளர்ப்பு கூலி உயர்த்தப்படவில்லை. ஆனால் நிறுவனங்கள் நல்ல லாபம் ஈட்டுகிறார்கள்.

சொந்த நிலத்தில் பண்ணை அமைத்து இரவு பகலாக குடும்பமே உழைத்து கோழிகளை பராமரித்து வளர்த்துக் கொடுக்கும் விவசாயிகள் கூலி உயர்வு கேட்டால் விவசாயிகளுக்கு கோழிக் குஞ்சுகளை இறக்க மறுத்து நிறுவனங்கள் விவசாயிகளை மிரட்டுகின்றனர். நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களைப் பயன்படுத்தி விவசாயிகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்கிறார்கள். நிறுவனங்களின் விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். 

”கறிக்கோழி பண்ணை விவசாயிகள் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கோழி வளர்த்து கொடுக்கிறார்கள். இதில் மாநில அரசு தலையிட முடியாது என்று அதிகாரிகள் சொல்லுவதை ஏற்க முடியாது. ஏற்கனவே, தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் கூலி உயர்வு கேட்டு போராட்டத்தை தமிழ்நாட்டில் நடத்தியுள்ளனர். அப்போது அமைச்சர் தலைமையில் முத்தரப்பு கூட்டம் நடத்தி உடன்பாடு எட்டப்பட்டது. அதன் அடிப்படையில் ரூ.3.50 ஆக இருந்த வளர்ப்புக்கூலி விவசாயிகளுக்கு  உயர்த்தப்பட்டது.

இன்று கூலி உயர்வு கோரி விவசாயிகள் போராடி வருகிற நிலையில் போராடுகிற விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும், கோழிக்கறி நுகர்வோரின் நலன்களை கருதியும், போராடுகிற விவசாய பிரதிநிதிகளை அழைத்து தமிழ்நாடு அரசு முத்தரப்பு கூட்டத்தை நடத்தி கோழி வளர்ப்பு கூலியை உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.