கறிக்கோழி விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசே உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.பி.பெருமாள் விடுத்துள்ள அறிக்கை :
” தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் பண்ணை விவசாயிகள் முத்தரப்பு கூட்டம் நடத்திட வலியுறுத்தியும், கூலி உயர்வு கேட்டும், இலவச மின்சாரம் வழங்கிடவும், தரமான குஞ்சுகள் மற்றும் தீவனங்கள் வழங்கிடவும், பிளாங் செக், பட்டா, பத்திரம் போன்ற ஆவணங்களை விவசாயிகளிடம் வாங்குவதை கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நலவாரியம் அமைத்து இஎஸ்ஐ மருத்துவ வசதிசெய்து கொடுத்திடவும் கோழிகளை பண்ணையிலிருந்து ஏற்றிய ஒரு வாரத்துக்குள் கம்பெனிகள் பண வழங்கிடவும் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல கறிக்கோழி விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டு காலமாக பல வடிவங்களில் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
போராடுகின்ற விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலிப்பதற்கு பதிலாக இந்திய ஒப்பந்த சட்டம் 1872-ஐக் காரணம் காட்டி கோழி வளர்ப்புத் தொழில் ஒப்பந்தச் சாகுபடியில் வருகிறது. ஆகவே இதில் அரசு தலையிட முடியாது என்று கால்நடைத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
21/01/26 அன்று சென்னையில் பேச்சுவார்த்தை என்று சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் அரசு சட்டக் கருத்துரு கேட்ட அடிப்படையில் பண்ணை விவசாயிகள் நீதிமன்றத்திற்குச் சென்று தீர்வு ஏற்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார் இயக்குநர்.
போராடுகின்ற விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதற்கு பதிலாக மாநில அரசு போராடுபவர்களை அலைக்கழிக்கக்கூடிய போக்கு ஏற்புடையதாக இல்லை. மேலும் கால்நடைத் துறை இயக்குநர் மாவட்ட அளவில் கால்நடை வளங்கள் குழு, வட்டார அளவில் கால்நடை வளங்கள் குழு மூலம் ஆய்வு செய்து பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் அறிக்கை பெற்று அதன்பின் நடவடிக்கை எடுப்பதாக மாநில கால்நடைத் துறை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை உடனடித் தீர்வுக்கு வழிவகை செய்யாது.
கரும்பு உட்பட்ட 23 வகையான பயிர்களுக்கு ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை தீர்மானிக்கிறது. இதில் ஒப்பந்தச் சாகுபடி முறையில் நடைபெறக்கூடிய பயிர்களும் உள்ளன. எனவே ஒப்பந்தச் சாகுபடி செய்யக்கூடிய பயிர்களுக்கு அரசு ஏற்கனவே விலை தீர்மானித்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் இதற்குமுன் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு முத்தரப்புக் கூட்டங்கள் பல முறை நடந்துள்ளன. அதன் மூலம் கூலி உயர்வு ஏற்பட்டுள்ளது.
மாநில அரசு முத்தரப்புக் கூட்டம் நடத்த முடியாது என்று சொல்லியிருப்பது ஏற்புடையதல்ல. எனவே, தமிழ்நாடு முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு போராடுகின்ற கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளையும், சங்க பிரதிநிதிகளையும், கம்பெனிகளையும் அழைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டத்தை நடத்தி தீர்வு காணவேண்டும்.” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.