அகில இந்திய மாணவர் பெருமன்றத்தினர் 
தமிழ் நாடு

கல்லூரிக் கல்வி இயக்ககத்தை முற்றுகையிட மாணவர் பெருமன்றத்தினர் முயற்சி!

Staff Writer

அரசியல் கட்சிகளைக் குறிப்பிட்டு கல்லூரிக் கல்வி இயக்குநர் வரம்புமீறிய சுற்றறிக்கையை அனுப்பியது, கடுமையாக சர்ச்சைக்கு உள்ளானது. அதைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்திருந்தது.

“ தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் இணை இயக்குநர் சார்பில் 17.08.2026 அன்று வெளியிடப்பட்டுள்ள கடிதம் மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. அரசு கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் இளைஞர்கள் அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில், பள்ளிக்கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதம் குறிப்பிடுகிறது.

மாணவர்கள் எந்த அரசியல் இயக்கத்தின் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள் என்பதை அரசு நிர்வாகம் கண்காணித்து, அதைத் தடுப்பதற்காக பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற இந்த அணுகுமுறை ஜனநாயகத்தின் அடிப்படைக்கே எதிரானது. மாணவர்கள் குடிமக்கள் இல்லையா? கல்லூரிக்குள் நுழைந்தவுடன் அவர்கள் தங்களது அரசியல் உரிமைகளை இழந்துவிடுகிறார்களா?

இந்திய அரசியலமைப்பின் Article 19(1)(a), 19(1)(b), 19(1)(c) ஆகியவை கருத்தை வெளிப்படுத்தும் உரிமை, அமைதியாக கூடும் உரிமை மற்றும் சங்கங்கள்/அமைப்புகளை உருவாக்கும் உரிமை ஆகியவற்றை குடிமக்களுக்கு உறுதி செய்கின்றன. மாணவர்கள் என்பதற்காக இந்த அடிப்படை ஜனநாயக உரிமைகளை யாரும் பறிக்க முடியாது.

மாணவர்களின் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கும் NEET, கல்விக் கட்டணம், கல்வி உரிமை, வேலைவாய்ப்பு, சமூகநீதி உள்ளிட்ட அனைத்தும் அரசின் கொள்கைகளோடு தொடர்புடையவை. இத்தகைய பிரச்சினைகள் குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்புவதும், கருத்து தெரிவிப்பதும், ஜனநாயக ரீதியான போராட்டங்களில் பங்கேற்பதும் அவர்களின் சமூகப் பொறுப்புணர்வின் வெளிப்பாடாகும். மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பிரச்சினைகள் அரசியலோடு தொடர்புடையதாக இருக்கும்போது, மாணவர்கள் மட்டும் அரசியலற்றவர்களாக இருக்க வேண்டும் என்று கூறுவது எப்படி நியாயமாகும்?

ஒரு மாணவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது மாணவர் அமைப்பு நடத்தும் அமைதியான போராட்டத்தில் கலந்து கொண்டார் என்பதற்காக அவரது அரசியல் செயல்பாட்டைக் கண்காணிப்பதும் தடுப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டவிரோதச் செயலைத் தடுப்பதற்கும் அரசியல் கருத்தைக் கண்காணிப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

இளைஞர்களின் அரசியல் பங்கேற்பையும் புதிய தலைமுறையின் குரலையும் முன்னிறுத்தி அரசியலுக்கு வந்ததாகக் கூறிக்கொள்ளும் TVK அரசு, இன்று ஆட்சியில் தனது நிர்வாகத்தின் மூலம் மாணவர்களின் அரசியல் பங்கேற்பைக் கண்காணிக்க அனுமதிக்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தின் போது போராட்ட உரிமை குறித்து பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு மாணவர்களின் போராட்ட உரிமையை கட்டுப்படுத்துவது இரட்டை நிலைப்பாடு அல்லவா?

அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் மாணவர்களுக்கு இருக்கும் உரிமை, அரசின் கொள்கைகளை எதிர்த்து கேள்வி எழுப்பும் மாணவர்களுக்கும் இருக்க வேண்டும். ஜனநாயகம் என்பது தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களின் கருத்தைக் கேட்பது அல்ல; ஆட்சியில் இருக்கும் அரசை தொடர்ந்து கேள்வி கேட்கவும், விமர்சிக்கவும், அமைதியான முறையில் எதிர்ப்பை பதிவு செய்யவும் மக்களுக்கு உரிமை இருப்பதுதான் ஜனநாயகம்.

மாணவர்கள் அரசின் கண்காணிப்புப் பொருட்கள் அல்ல; ஜனநாயகத்தின் செயல்படும் குடிமக்கள். மாணவர்களின் அரசியல் செயல்பாடுகளை கண்காணித்து அச்சுறுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும். மாணவர்களின் குரலை ஒடுக்காமல், அவர்களின் ஜனநாயக உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டும்.

எனவே, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் பங்கேற்பைக் கண்காணித்து தடுக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இந்த உத்தரவு எந்த அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது என்பதையும் முதலமைச்சரும் உயர்கல்வித்துறை அமைச்சரும் பொதுவெளியில் விளக்க வேண்டும். மாணவர்களின் அரசியல் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தனது நிலைப்பாட்டை TVK அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இந்த அறிவிப்பை திரும்ப பெற கோரி நாளை (20/08/2026) தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் போராட்டம் நடத்த இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு அறைகூவல் விடுக்கிறது

மாணவர்களின் குரலை கண்காணிக்காதே – கேள்!மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்காதே – ஜனநாயகத்தை மதித்திடு! மாணவர்களின் அரசியல் உரிமையைப் பாதுகாப்போம்!” என்று இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மிருதுளா, செயலாளர் சம்சீர் அகமது ஆகியோர் அறிக்கை ஒன்றில் கூறியிருந்தனர்.

இதனிடையே, அகில இந்திய மாணவர் பெருமன்றம் அமைப்பினர் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ள சைதாபேட்டையில் அந்த அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். தடையை மீறிய அவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.