தமிழ் நாடு

காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை இடம் உறுதியானது!

Staff Writer

வரக்கூடிய சட்டப்பேரவைத்தொகுதிப் பங்கீடு தொடர்பாக சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்தின. அதில், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

பேச்சுவார்த்தையில் கூடுதல் தொகுதிகள் கேட்கப்பட்டனவா, எத்தனை தொகுதிகள், கடந்த முறையைவிட எத்தனை தொகுதிகள் என செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். அதில் ஒன்றுக்கும் செல்வப்பெருந்தகை திட்டவட்டமாக பதில் கூறவில்லை.

விரைவில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஓர் இடம் ஒதுக்குவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், த.வெ.க.வுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறப்படுவது பற்றிக் கேட்டதற்கு, யார் நடத்துகிறார்கள்? ஊடகங்கள் தவறாகச் செய்தி வெளியிடுகின்றன என்றார் அவர்.

அவர் அருகில் இருந்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரைக் குறிப்பிட்டு, அவர் ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறாரே என்றதற்கு, அவர் அப்படியெல்லாம் கூறவில்லை; கருத்தைத் திரித்துக் கூறுகிறார்கள் என செல்வப்பெருந்தகை கூறினார்.

அத்துடன், இப்படி செய்தி வெளியிடுவதைக் கண்டிப்பதாகவும் வழக்கு தொடுக்கப்போவதாகவும் செல்வப்பெருந்தகை சொன்னார்.