வைகோ 
தமிழ் நாடு

காவிரி உரிமையைப் பறிக்க பா.ஜ.க. அரசு முயற்சி- வைகோ

Staff Writer

”மாநிலங்களவையில் பா.ம.க. தலைவர் அன்புமணி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசின் நீர்வளத் துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி அளித்துள்ள பதில் தமிழ்நாட்டிற்கு பாதகம் விளைவிக்குமோ என்ற ஐயம் எழுந்துள்ளது.” என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

” “காவிரி பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த 2018 பிப் 16 ஆம் தேதி அளித்த தீர்ப்பில், காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் கட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை."

“நடுவர் மன்ற தீர்ப்பின் ஒரு பகுதியாக, காவிரி நீரை அந்தந்த மாநிலத்தில் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் உள்ளிட்ட தங்களது தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும், பலனை அனுபவிக்கவும், திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் எந்த கட்டுப்பாடும் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது."

இவ்வாறு ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சர் கூறியிருப்பது கர்நாடக மாநிலம் மேகதாட்டு அணை கட்டுவதற்கு வழங்கப்படும் அனுமதிக்கான சமிக்ஞை போன்று தெரிகிறது.

2018 பிப்ரவரி 16 ஆம் நாள் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உறுதி செய்வதாகவே இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகத் தெளிவானது.

"Nothing in the order of this Tribunal shall impair the right or power or authority of any State to regulate within its boundaries the use of water, or to enjoy the benefit of waters within that State in a manner not inconsistent with the order of this Tribunal." (Clause XVIII, Tribunal directions reproduced and endorsed by the Supreme Court)

"இந்தத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு முரணாக இல்லாத வகையில், ஒவ்வொரு மாநிலமும் தனது எல்லைக்குள் நீரின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தவும், அந்த மாநிலத்திற்குள் உள்ள நீரின் பயனை அனுபவிக்கவும் உள்ள அதிகாரம் பாதிக்கப்படாது.

"The upper riparian State shall not take any action so as to affect the scheduled deliveries of water to the lower riparian States."

"மேல்பகுதி (Upper Riparian) மாநிலம், கீழ்ப்பகுதி மாநிலங்களுக்கு அட்டவணைப்படி வழங்க வேண்டிய நீர்வரத்தை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது."

கீழ்பகுதி மாநிலம் (lower Riparian), அதாவது தமிழ்நாடு பெற்று வரும் காவிரி நீர் வரத்தை தடுக்கும் வகையில் மேல்பகுதி மாநிலமான கர்நாடகம் தடுப்பணைகளை அமைக்க கூடாது என்பதுதான் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்சமாகும்.

கர்நாடக மாநிலத்தின் எந்த நடவடிக்கையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்த காவிரி நீர்ப் பங்கீடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட நீர்வரத்தை பாதிக்கக் கூடாது என்பதே தீர்ப்பின் முக்கியக் கோட்பாடாகும்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றை நீர்த்துப் போக செய்து, கர்நாடக மாநிலம், மேகதாட்டு அணை கட்டுவதற்கு ஒன்றிய பாஜக அரசு வஞ்சகமான முறையில் அனுமதி வழங்க முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

தமிழ்நாடு அரசு இதில் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.

மேகதாட்டு அணை குறித்து கர்நாடக அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை என்பதே கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

சர்வதேச நீர் பங்கீடு சட்டங்களின் படியும், இயற்கை நீதியின் படியும் உரிமை உள்ள கீழ்பகுதி மாநிலமான தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையைத் தட்டிப் பறிப்பதற்கு ஒன்றிய அரசின் துணையுடன் கர்நாடக மாநிலம் முயற்சிப்பதை முறியடிக்க வேண்டும்.” என்று வைகோவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.