அமைச்சர் மா.சுப்பிரமணியன் 
தமிழ் நாடு

கிட்னி திருட்டு- 2019இலேயே நடந்தது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Staff Writer

நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு பிரச்னை தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகள் மீது பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருந்தார். 

இந்த நிலையில், சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். 

குறிப்பாக, அண்ணாமலையின் கருத்தைப் பற்றி செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு அவர், கிட்னி திருட்டா முறைகேடா என்பது விவாதம் இல்லை; ஏற்கெனவே சொன்னதுதான் தெரிந்து எடுத்தால் அது முறைகேடு; தெரியாமல் எடுப்பதற்குப் பெயர் திருட்டு; இது தமிழ் அகராதி. யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலை இல்லை. இதில் எடுத்த நடவடிக்கையைத்தான் பார்க்க வேண்டும்.” என்றார். 

மேலும், “கடந்த 2019ஆம் ஆண்டில் அதே நாமக்கல் மாவட்டத்தில் அதே பகுதியில் இந்தமாதிரியான நிகழ்வு நடைபெற்று, காவல்துறையிலிருந்து மருத்துவத் துறைக்கு நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். இதில் மருத்துவத் துறையில் அந்த ஆவணம் இல்லை. காவல்துறையிடம் மட்டும் கடிதத்தை வாங்கி வைத்திருக்கிறோம். அதே ஊரில்தான் நடந்திருக்கிறது. இந்த ஆட்சியில் இரண்டு மருத்துவமனைகளின் உடலுறுப்பு மாற்ற உரிமத்தை இரத்து செய்திருக்கிறோம். வினீத் ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான முதல் கட்ட விசாரணையின்படி இது செய்யப்பட்டிருக்கிறது. பின்னர் துறைரீதியான விசாரணை நடத்தப்படும். இதைப் பார்த்து மற்றவர்கள் எச்சரிக்கை அடையவேண்டும். உடல் உறுப்பு தானத்தில் மனிதநேயம் மட்டும்தான் மிஞ்சி இருக்கவேண்டும். இப்படிச் செய்வது ஓர் ஈனப்பிழைப்பு. இதில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.