கடலூர் மாவட்டத்தில் கடலூர் - சிதம்பரம் சாலையில் இருக்கும் சிப்காட் தொழில் மையத்தில் 50-க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக கடைப்பிடிக்கப்படாததாலும், புதுப்பிக்கப்படாத இயந்திரங்களாலும் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் அப்பாவி மக்களும், ஊழியர்களும் பாதிக்கப்படுவதுடன் உயிரிழப்பும் நேரிடுகிறது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
”‘கிரிம்சன் ஆர்கானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பூச்சி மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி’ கிரிம்சன் தொழிற்சாலைக்குள் ஏற்பட்ட விபத்தில், ரசாயனப் புகை வெளியேறியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் தொழிற்சாலையை ஒட்டியிருக்கும் குடிகாடு கிராமம் முழுவதும் புகைமண்டலமாக மாறியதுடன் அதையடுத்து அப்பகுதியில் இருந்த அந்த மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் இருமல் ஏற்பட்டு, அடுத்தடுத்து மயங்கி விழு ஆரம்பித்தனர். அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அலறி கூச்சலிட்டனர். அதற்கடுத்த சில நிமிடங்களில் அவர்களும் மயங்கி விழுந்தனர். தொடர்ந்து மயக்கமடைந்த நூற்றுக்கணக்கானவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த 2021-இல் இந்த தொழிற்சாலையின் பாய்லர் வெடித்ததில் ஒரு பெண் உட்பட நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
செய்தித்தாள்களில் வெளியான விபத்து பற்றிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் கிரிம்சன் தொழிற்சாலையை முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிட்டது.
தொடர்ச்சியாக விபத்துகளை ஏற்படுத்தி வரும் இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள், கோரி வருகின்றனர்.” என்று வைகோவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
”கிரிம்சன் தொழிற்சாலையில் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஜெ. சிவராமன், இந்த தொழிற்சாலைக்குள் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது என்று கிரிம்சன் நிர்வாகத்திற்கு அவ்வப்போது சுட்டிக்காட்டி வந்துள்ளார். ஏற்கெனவே உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாக அதிகாரியிடம் வலியுறுத்தி இருக்கிறார்.
ஆனால் கிரிம்சன் நிர்வாகம் பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்யவோ, தொழில்நுட்ப நீதியாக ஆய்வு நடத்தி அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யவும் முன்வரவில்லை.
இதனால் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகின்றன.
சிவராமன் பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டியதால் கிரிம்சன் நிர்வாக இயக்குனர் அவர் மீது காவல்துறையில் பொய் குற்றச்சாட்டுகளை புனைந்து புகார் கொடுத்திருக்கிறார். மேலும் தனிப்பட்ட முறையில் அவரை இழிவுபடுத்தி ஊடகங்களில் பேசிதோடு, இத்தொழிற்சாலையின் அருகில் உள்ள குடிகாடு கிராம மக்களையும் தவறாக சித்தரித்தது கண்டனத்துக்குரியது.
கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி குடிகாடு கிராம பொது மக்கள் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து கிரிம்சன் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் லிமிடட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் தொழில்நுட்ப குழு அமைத்து கிரிம்சன் தொழிற்சாலையில் ஆய்வு செய்து விசாரணை நடத்தவும், தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்.” என்றும் வைகோவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.