எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது பற்றி தே.மு.தி.க. நேற்று அறிவிப்பதாக முன்னர் கூறப்பட்டிருந்தது.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் மாநாட்டில் பேசிய தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கவில்லை.
கூட்டணி தொடர்பாகத் தீர்மானிக்கும் அதிகாரத்தை பிரேமலதாவுக்கு வழங்குவதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் சொன்னபடி அறிவிக்காத பிரேமலதா, பொடிவைத்தபடி பேசினார்.
மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகள் இதுவரை கூட்டணியை அறிவிக்காதபோது நாம் மட்டும் முந்திரிக்கொட்டை மாதிரி ஏன் அவசரப்பட வேண்டும்? இதுவரை சத்திரியனாக வாழ்ந்துவிட்டோம்; இனி சாணக்கியத்தனமாக நாமும் வாழவேண்டும்; நமக்கென்று ஒரு கௌரவம், மதிப்பு உண்டு; அதை யார் மதிக்கிறார்களோ அவர்களோடுதான் கூட்டணி என்று மட்டும் பிரேமலதா பேசினார்.
அவரின் பேச்சில் கூட்டணி குறித்து அறிவிப்பு இல்லாததால் தே.மு.தி.க. தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
முன்னதாக, மாநாட்டில் விஜயகாந்த் நடித்த பல்வேறு படங்களில் அவருடைய பாத்திரங்களின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டிருந்தன; அவற்றின்முன்பாக தொண்டர்கள் ஆர்வத்துடன் நின்று செல்பி எடுத்துக்கொண்டனர்.