தமிழ் நாடு

கோவை சிறுமிக்கு கொடூரம்- கடும் தண்டனை உறுதி: முதல்வர் விஜய்

Staff Writer

கோவை சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடூரத்துக்குக் காரணமானவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.

தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.” என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.