செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் தலைவர் 
தமிழ் நாடு

சட்டமன்றத்தை அவமதித்த செயல்- தமிழக காங்கிரஸ்

Staff Writer

”ஒவ்வோர் ஆண்டுத் தொடக்கத்திலும் நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்துவது தொடர்ந்து நடைபெற்று வருவது மரபாகும். அந்த மரபின்படி இன்று கூடிய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தது அரசமைப்புச் சட்டத்தையும், சட்டமன்ற மாண்புகளையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும் அவமதித்த செயலாகக் கருதி அதை வன்மையாக கண்டிக்கின்றேன்.” என தமிழக காங்கிரஸ்தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். 

அறிக்கை ஒன்றில் இதைக் கூறியுள்ள அவர், ”ஆளுநர் உரைக்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதன்பின்னர் ஆளுநர் தனது உரையுடன் அவை நடவடிக்கையை தொடங்கி வைக்கும்படி அவருக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை விடுத்தார். ஆனால், ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு தொடர்ச்சியாக தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளிநடப்பு செய்திருக்கிறார். தமிழ்நாடு அரசு தயாரிக்கிற உரையைத் தான் ஆளுநர் வாசிக்க வேண்டும். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் ஆளுநர் உரை நிகழ்த்தும் போது ஏதாவது ஒரு வகையில் சர்ச்சைகளை நிகழ்த்தி வெளிநடப்பு செய்து வருகிறார். அத்தகைய ஜனநாயக விரோதப் போக்கை தான் ஆளுநர் தற்போதும் பின்பற்றி வருகிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார். 

”ஆளுநரின் அதிகாரம் அரசமைப்புச் சட்டத்தின் மூலமும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் வாயிலாகவும் பலமுறை தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 2025 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, ஒரு மாநிலத்தில் இரு நிர்வாக அதிகார மையங்கள் இருக்கக் கூடாது. அமைச்சரவைக்குத் தான் முழு அதிகாரம், அரசமைப்புச் சட்ட பிரிவு 200, 201 ஆளுநருக்கு உள்ள அதிகாரங்களை தெளிவாக கூறியுள்ளது. சட்டப்பேரவை நிறைவேற்றுகிற மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது. அப்படி செய்தால் நீதிமன்றம் தலையிடும் என்று அந்த தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்த தீர்ப்பையும் மதிக்காமல் உதாசீனப்படுத்துகிற அலட்சியப் போக்கு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு இருக்கிறது. இது அவரது அரசியல் உள்நோக்கத்தையும், ஆணவப் போக்கையும் வெளிப்படுத்துகிறது.

அரசமைப்பு சட்டப் பிரிவு 163 (1)-ன்படி ஆளுநருக்கு அறிவுரை கூறுவதற்கும், உதவி செய்வதற்கும் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை குழு உள்ளது. நடைமுறையில் முழு நிர்வாகமும் ஆளுநரின் பெயரில் செயல்பட்டாலும் அதிகாரத்தை உண்மையில் செலுத்துவது அமைச்சரவை குழுவே. அமைச்சரவையின் அறிவுரைக்கு எதிராக ஆளுநர் செயல்பட முடியாது. அவரது விருப்புரிமை மிகமிக குறைவாகும். இந்நிலையில் அரசமைப்புச் சட்ட பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு எதிராக செயல்படுகிற ஆளுநர் ஆர்.என். ரவி அந்த பதவியை வகிப்பதற்கு எந்த தகுதியும் இல்லை. அவரைப் போன்றவர்கள் அந்த பதவியில் தொடர்ந்து நீடிப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வுக்கும் எதிராக செயல்படுகிற ஆளுநர் ஆர்.என். ரவி உடனடியாக அப்பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டும்.” என்றும் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.