கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சாலையில் சென்ற பெண்களை ஆபாசமாக பேசி தொந்தரவு செய்த இரு இளைஞர்களை தைரியமாக அப்பெண்கள் எதிர்த்து தக்க பாடம் புகட்டியுள்ளனர் என்று பா.ஜ.க.வின் சட்டப்பேரவை உறுப்பினரும் அக்கட்சியின் தேசிய மகளிர் அமைப்புத் தலைவருமான வானதி சீனிவாசன் பாராட்டியுள்ளார்.
”தமிழகத்தில் அம்மையார் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மிகுந்த கட்டுக் கோப்பாக இருந்த சட்டம் ஒழுங்கு இன்று விடியா திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கிறது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். குழந்தைகள் முதல் முதியோர் வரை இதுபோன்ற கொடுமைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாவது தொடர்கதையாகி வருகிறது.
போக்சோ வழக்குகளும், பாலியல் வழக்குகளும், வன்கொடுமை வழக்குகளும் அதிகரித்து பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாற்றி சாதனை படைத்திருக்கிறது தீயசக்தி திமுக அரசு. இனியும் திமுக அரசு பெண்களுக்குப் பாதுகாப்புதரும் என்பதெல்லாம் கற்பனைக்கும் எட்டாத ஒன்று. இந்த மகளிர் தினத்தில் பெண்களாகிய நாம் நம்மைக் காத்துக் கொள்ள சபதம் எடுப்போம்.
ஆபாசமாகப் பேசிய அந்த இளைஞர்களை விளாசி சட்டத்தின் முன் நிறுத்திய அப்பெண்களின் தைரியத்தை பாராட்டுகிறேன்.” என்று வானதி தன்னுடைய சமூக ஊடகப் பக்கங்களில் தெரிவித்துள்ளார்.