தமிழ் நாடு

சிரிக்காமல் பேட்டி கொடுக்கிறார் பழனிசாமி- மு.க.ஸ்டாலின் நக்கல்!

Staff Writer

அரியலூரில் இன்று அரசு நலத் திட்ட விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ஆட்சியின் சாதனைகளைப் பெருமையாக விவரித்தார். அத்துடன் அரசியலையும் பேசினார். 

அப்போது, “2011-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 10 ஆண்டு காலம் சிறந்த ஆட்சியை அ.தி.மு.க. தந்ததாகவும்; அம்மையார்ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நிறைய திட்டங்களை கொண்டுவந்து, அவர் மறைவிற்குப் பிறகு நான்கு ஆண்டு தான் சிறப்பாக ஆட்சி செய்ததாகவும்” - சிரிக்காமல் பேட்டி கொடுத்திருக்கிறார். பொய்க்கு மேக்கப் போட்டால் அது உண்மையாகிவிடாது. இன்னும் பளிச்சென்று அம்பலப்பட்டு போகும்.” என்று மு.க.ஸ்டாலின் நக்கலாகப் பேசினார்.

மேலும், ”தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு என்று ஒன்றை நடத்தினார் பழனிசாமி அவர்கள். அது உங்களுக்கு தெரியும். 3 இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டை, தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து சேர்த்துவிட்டேன் என்று பெருமையோடு பேசினார்.

பழனிசாமி அவர்களே… நீங்கள் நடத்திய முதலீட்டாளர் மாநாடு மூலமாக எவ்வளவு முதலீடுகள் வந்தது? இதனால் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் எத்தனை பேர்? இதையெல்லாம் புள்ளிவிவரத்துடன் உங்களால் சொல்ல முடியுமா? வந்தவர்களையும் விரட்டி விட்டார்கள். ஏன் என்றால், கரப்ஷன் – கமிஷன் – கலக்‌ஷன். அந்த ஆட்சிக்குப் பயந்து, தமிழ்நாட்டை விட்டு ஓடிச் சென்றவர்கள் பலபேர், நம்முடைய திராவிட மாடல் ஆட்சிதான் திரும்ப அழைத்துக்கொண்டுவந்து தொழில் மறுமலர்ச்சியை இன்றைக்கு ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

கடந்த மூன்று ஆண்டுகளில், 31 இலட்சம் பேர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், 10 இலட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறோம். உடனடியாக அவர்களைத் தொழில் தொடங்க அனைத்துவித முயற்சிகளும் எடுத்துக்கொண்டு இருக்கிறோம். நானே பல திறப்பு விழாக்களுக்கு சென்றுவருகிறேன்.

கலந்துகொண்டு வருகிறேன். திறந்துவைத்துவிட்டு வருகிறேன். இதுதான் நல்லாட்சியின் அடையாளம்! ஆனால், பழனிசாமி ஆட்சியின் நிலைமை என்ன? “எப்போதுதான் முடியும் இந்த ஆட்சி”-என்று, தன்மானம் உள்ள ஒவ்வொரு தமிழரும் காத்திருந்த நிலையில் தான் இருந்தது பழனிசாமி ஆட்சி.” என்றும் ஸ்டாலின் பேசினார்.