போராடும் ஆசிரியர்கள் 
தமிழ் நாடு

சிறப்பு டெட் இல்லை; 4 இலட்சம் ஆசிரியர்களுக்கு துரோகம்!

Staff Writer

”தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாது என்றும், அடுத்த ஆண்டு ஜூலை மற்றும் திசம்பர் மாதங்களில் தான் வழக்கமான ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை கைவிட மாட்டோம் என்று கூறி வந்த திமுக அரசு, இதன்மூலம் அவர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு எந்தத் தீர்வையும் வழங்காமல், அவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்திருக்கிறது.” என்று பா.ம.க. தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கை விவரம் :

”ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 2026&ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளின் அட்டவணை இதுவரை வெளியிடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி கடந்த 18&ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதன்பயனாக 2026&ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இப்போது வெளியிட்டுள்ளது. அதில் மே மாதத்திற்கு முன்பாக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு எதுவும் நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஏமாற்றமாகவும், துரோகமாகவும் அமைந்துள்ளது.

கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்; தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2011&ஆம் ஆண்டுக்கு முன்பாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பயின்ற போது இருந்த பாடத்திட்டமும், இப்போது உள்ள பாடத்திட்டமும் முற்றிலுமாக மாறுபட்டது என்பதால், அந்த ஆசிரியர்களால் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது மிகவும் கடினம் ஆகும். அதனால் தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் அல்லது சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இந்த யோசனையை திமுக அரசு செயல்படுத்தி இருந்தால் உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணியை இந்நேரம் உறுதி செய்திருக்க முடியும்.

ஆனால், இந்த விவகாரத்தில் திமுக அரசு முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகளை எடுத்து ஆசிரியர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்து வெற்றி பெறுவது, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்தி அதில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவதை உறுதி செய்வது, 2011&ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின் 23&ஆம் பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும் ஆகியவை தான் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் ஆகும். ஆனால், இந்த 3 வாய்ப்புகளையுமே பயன்படுத்திக் கொள்ளாமல் ஆசிரியர்களை திமுக அரசு பழிவாங்கிவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த அக்டோபர் 1&ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அதன்பின் 4 மாதங்களாகிவிட்ட நிலையில் இன்று வரை அந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வர திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், அந்த வாய்ப்பு வீணாகிவிட்டது.

அடுத்ததாக 2026 ஜனவரி 24, 25 ஆகிய சிறப்புத் தகுதித் தேர்வு நடத்துவதற்கான அறிவிக்கையை கடந்த நவம்பர் 19&ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஆனால், அறிவிக்கை வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே திரும்பப் பெறப்பட்டது. இதன் மூலம் இரண்டாவது வாய்ப்பும் வீணடிக்கப்பட்டுவிட்டது.

மூன்றாவதாக, 2011&ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்பதை இரத்து செய்யும் வகையில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் 23&ஆம் பிரிவில் திருத்தம் செய்யும்படி கடந்த ஆண்டு நவம்பர் 25&ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதன் மீதும் தொடர் நடவடிக்கைகள் எதையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை. ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்கு மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின் 23&ஆம் பிரிவை மாற்றினால் மட்டும் போதாது; தமிழ்நாடு அரசின் 16&ஆம் பிரிவையும் மாற்ற வேண்டும். ஆசிரியர்கள் நலனில் அக்கறை இருந்திருந்தால் தமிழ்நாடு சட்டத்தில் திருத்தம் செய்து மத்திய சட்டத்திலும் அதேபோல் திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக அரசு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று முடிவடைந்து விட்ட நிலையில், அத்தகைய சட்டத் திருத்தத்தை நிறைவேற்றும் வாய்ப்பையும் திமுக அரசு வீணாக்கிவிட்டது.

இப்போதுள்ள நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தீர்வு வழங்குவதற்காக திமுக அரசின் முன் உள்ள ஒரே வாய்ப்பு எளிமையான பாடத்திட்டம், குறைக்கப்பட்ட தேர்ச்சி மதிப்பெண்கள் ஆகியவற்றுடன் சிறப்புத் தகுதித் தேர்வை நடத்தி, ஆசிரியர்களை தேர்ச்சி பெற வைப்பது தான். அதற்கான அறிவிக்கை குறைந்தபட்சம் ஜனவரி மாதம் இறுதிக்குள்ளாக வெளியிடப்பட வேண்டும். ஆனால், ஜூலை மாதத்திலும், திசம்பர் மாதத்திலும் தான் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்; அதுவும் வழக்கமான பாடத் திட்டம், வழக்கமான தேர்ச்சி மதிப்பெண்ணுடன் தான் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருப்பதன் மூலம் திமுக ஆட்சியில் ஆசிரியர்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது என்பது உறுதியாகிவிட்டது.

திமுக ஆட்சியில் அனைத்து வகையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துரோகம் இழைக்கப் பட்டுள்ளது. இப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களும் திமுக அரசின் துரோகத்திற்கு ஆளானவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.