மு.வீரபாண்டியன் 
தமிழ் நாடு

சி.வி.சண்முகத்துக்கு மு.வீரபாண்டியன் கண்டனம்!

Staff Writer

திரைப்படக் கலைஞர் திருமதி நயன்தாராவை சி.வி.சண்முகம் இழிவுபடுத்திப் பேசியது கண்டனத்திற்குரியது  என்று இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மூ.வீரபாண்டியன் கூறியுள்ளார். 

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை : 

” அ.இ.அ.தி.மு.க.வின் சி.வி. சண்முகம் பெண்கள் பாதுகாப்புக்கான ஆர்ப்பாட்டத்தில் திரைப்பட கலைஞர் திருமதி நயன்தாராவை இழிவுபடுத்திப் பேசியுள்ளார். பெண்களை அவமதிக்கும் ஆணாதிக்க வன்மம், பொது வாழ்வின் நாகரிக எல்லைகளை முற்றிலும் மீறியுள்ளது. அரசியல் மேடைகள் பெண்களை இழிவுபடுத்தும் இடங்களாக மாற்றி சி.வி.சண்முகம் திருமதி நயன்தாராவை தரக்குறைவாக பேசியதை இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை இழிவுபடுத்தி மாண்பையும், கண்ணியத்தையும் சிதைப்பது சி.வி.சண்முகத்தின் ஆணாதிக்க மனப்போக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இப்படிப்பட்ட பேச்சுகள், பொதுவாழ்வில் பங்கேற்கும் பெண்களைக் கடுமையாகக் காயப்படுத்தி வெளியேற்றும் நோக்கம் கொண்டதாகும்.

பெண்களை இழிவுபடுத்தும் அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சி.வி. சண்முகம் மீது தேர்தல் ஆணையம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.