கார்த்திகா கைது விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியினர் சமூகஊடகங்களில் கவனமாகக் கருத்திட வேண்டும் என அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிசெந்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு:
”நேற்று காலை நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்பு தங்கை கார்த்திகா மாப்பிள்ளை முருக சந்திரகுமார் மற்றும் அன்புத் தம்பி இசை மதிவாணன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி உறவுகள் கைதானது முதல் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையை சேர்ந்த வழக்கறிஞர்கள் உடனிருந்து அவர்களின் விடுதலைக்காக உழைத்து வருகிறார்கள்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் மேற்பார்வையில் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையின் பொறுப்பாளர்களில் ஒருவரான கரூர் மூத்த வழக்கறிஞர் நன்மாறன் தலைமையில் ஈரோடு கார்த்தி, அவிநாசி பகவத் ,கோவை சூர்யா, தாராபுரம் முகமது உசேன், தாராபுரம் முருகானந்தம், கரூர் பார்த்திபன், கரூர் இளமாறன், திண்டுக்கல் மாதவன் உள்ளிட்ட வழக்கறிஞர் குழு உடனடியாக அமைக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்களின் விடுதலைக்காகவும் பிணைக்காகவும் பணிகள் உடனே தொடங்கப்பட்டன. திருப்பூர் நகரத்தின் மூத்த வழக்கறிஞர் அன்புத் தோழர் உமர் கயான் கடுமையான இந்த நேரத்தில் மிகுந்த அக்கறையாகவும், உதவியாகவும் இருந்தது நன்றிக்குரியது.
காலை 5.30 மணிக்கு தங்கை கார்த்திகா மற்றும் மாப்பிள்ளை முருகசந்தரகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் கழித்தே தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர்களின் கடுமையான அழுத்தத்திற்கு பிறகே அவர்கள் தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார்கள். அவர்களது வருகைக்காக காத்திருந்த நாம் தமிழர் கட்சி உறவுகளை கலைப்பதற்காக காவல்துறை முயன்றார்கள். பிறகு அங்கிருந்த தம்பி பேரறிவாளனை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்ய காவல்துறை முயன்ற போது அங்கே திரண்டு இருந்த நாம் தமிழர் கட்சி உறவுகளும் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை வழக்கறிஞர்களும் கடுமையாக போராடி அந்த கைதை தடுத்திருக்கிறார்கள்.
பிறகு இரவு 9 மணி அளவில் தங்கை கார்த்திகா தம்பி இசை மதிவாணன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி உறவுகள் தாராபுரம் நீதித்துறை நடுவர் முன்பாக முன்னிறுத்தப் பட்டார்கள். அப்போதே பிணை மனுவும் ( Bail Application) மற்றும் ரீமாண்டை எதிர்த்து மனுவும் ( Rejection of remand) நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்களால் தாக்கல் செய்யப்பட்டன. இந்த இரண்டு மனுக்களுக்கும் அரசு தரப்பில் கடுமையான ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக மாண்பமை நீதித்துறை நடுவர் அவர்கள் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்களால் தாக்கல் செய்யப்பட்ட Rejection of remand மனு குறித்து இரு தரப்பு வாதங்களையும் கேட்கத் தொடங்கினார். இரவு 9.30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணி வரை இருதரப்பு வாதங்களும் கடுமையாக நடைபெற்றன. விடிய விடிய நடைபெற்ற அந்த விவாதத்தில், குறிப்பாக இந்த ரிமாண்ட் எப்படி சட்ட விரோதமானது என்பது குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுடன் தம்பி கரூர் வழக்கறிஞர் நன்மாறன் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.
அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்பினால் Rejection of remand மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. அதே சமயத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு சரியான விபரங்களுடன் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து விசாரணை தேதியை அறிவிப்பதாக சொல்லி நீதித்துறை நடுவர் அவர்கள் உத்தரவு பிறப்பித்தார். விடியற்காலை 4 மணிக்கு கோவை மத்திய சிறைக்கு தங்கை கார்த்திகா உள்ளிட்டவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். தற்போது சிறையில் தங்கை கார்த்திகா உள்ளிட்டவர்களை சந்திப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை சார்பாக மனு செய்யப்பட்டு வழக்கறிஞர் கோவை சூர்யா அவர்கள் கோவை சிறைச்சாலை முன் காத்திருக்கிறார்.
அதேபோல இன்னும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு தாமதமாக கைது செய்யப்பட்ட மூன்று உறவுகள் ரிமாண்ட் செய்யப்படாமல் தாராபுரம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை சந்திப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் தம்பி திருப்பூர் சரவணன் அவர்கள் அங்கே சென்றிருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர் கரூர் மூத்த வழக்கறிஞர் தம்பி நன்மாறன் தாராபுரம் முகமது உசேன் ஆகியோர் இன்றே பிணை மனுவை விசாரணைக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் தாராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பணிகளை எல்லாம் ஒருங்கிணைத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் எங்களை வழிநடத்தி வருகிறார்கள்.
உறுதியான சட்டப் போராட்டத்தின் மூலமாக தங்கை கார்த்திகா தம்பி இசை மதிவாணன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி உறவுகள் மிக விரைவில் பிணையில் வருவதற்கான பணிகளை நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை உறுதியாக மேற்கொண்டு வருகிறது.
கட்சி உறவுகளின் கவனத்திற்கு..
சமூக வலைதளங்களில் பதிவுகள் இடும்போது பொறுப்பற்ற முறையில் பதிவுகள் இட வேண்டாம் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். சிலர் உணர்ச்சி வசப்பட்டு இடும் பதிவுகள் வழக்கு தன்மையை பாதித்து நமது உறவுகளின் விடுதலைக்கு எதிராக இருக்கின்றன. வழக்குக் குறித்தோ கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை குறித்தோ தவறான தகவல்களை பொதுவெளியில் பரப்புவதோ தெரிவிப்பதோ கூடாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை வழக்கறிஞர்களை வழிநடத்தி வருகிறார். அவரது சீரிய வழிகாட்டலின் அடிப்படையில் நமது வழக்கறிஞர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.” என்று மணி செந்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.