தலைநகர் சென்னையின் மிக முக்கியப் பொது இடங்களுள் ஒன்றான கோயம்பேடு பகுதியில், நேற்று இளம் பெண் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைக்கின்றது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
”பொது மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு பகுதியில், இத்தகையதொரு துணிகரமான குற்றம் அரங்கேறியிருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் நிலையை உலுக்கும் விதமாக அமைந்துள்ளது. கொல்லப்பட்ட அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது இதுவரை காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.” என்றும் அறிக்கை ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
“பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கண்காணிப்புக் கேமராக்களை அதிகரிப்பதோடு, காவல்துறை ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மக்களின் உயிருக்கும், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பிற்கும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் இத்தகைய வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு கடுமையான, உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.” என்றும் செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டுள்ளார்.